ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த கலவரத்தின் போது தீயில் சிக்கிய குழந்தை மற்றும் 3 பெண்களை காப்பாற்றிய காவலரை முதல்வர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்தால் தற்போது அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக வன்முறையாளர்கள் வீடு, கடைகளுக்கு தீவைத்த போது, தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிய குழந்தையை, போலீஸ்காரர் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தற்போது அவர் ராஜஸ்தான் மக்களால் ஹீரோவாக பாராட்டப்படுகிறார். 31 வயதான கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மா, சம்பவ நாளில் வன்முறையாளர்களால் தீவைத்து கொளுத்தப்பட்ட வீட்டிற்குள் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதைக் கண்டதும், அவர் விரைந்து வீட்டிற்குள் சென்று குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே விரைந்தார். மேலும் தீயில் சிக்கியிருந்த மூன்று பெண்களையும் பாதுகாப்பாக தப்பிச் செல்ல உதவியுள்ளார். அதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில், ‘மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய காவலர் நேத்ரேஷ் ஷர்மாவின் துணிச்சலையும் மனிதநேயத்தையும் பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மா கூறுகையில், ‘என் கண் முன்னே நான்கு உயிர்கள் தீயில் கருகி சாவதை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதனால் என் உயிரை இழந்தாவது அவர்களை காப்பாற்றுவதுதான் எனது கடமை என்று உணர்ந்தேன். அந்த நேரத்தில் எனது சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்க நேரமில்லை. அவர்களை அங்கிருந்து காப்பாற்ற முயன்ற போது, குழந்தை மற்றும் 3 பெண்களின் முகத்தில் இருந்த மரண பயத்தை என்னால் மறக்கவே முடியாது. வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை தூக்கிக் கொண்டு, என் பின்னால் வாருங்கள் என்று அந்த பெண்களிடம் சொன்னேன். அவர்களும் என்னுடன் துணிச்சலாக வெளியே வந்தனர்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.