கடந்த ஆண்டு, தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட சிறப்பு உள் ஒதுக்கீடு அரசியலமைப்பை மீறுகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. தமிழக அரசு, பாமக தரப்பில் இருந்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவு சரியானது என்று தீர்ப்பளித்தது. பாமக சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த உச்சநீதிமன்றம் வெறும் சாதி அடிப்படையில் ஒரு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க இயலாது மற்றும் வன்னியர் சமூகத்தின் கல்வி பொருளாதார சமூக பின்னடைவை உறுதிப்படுத்தும் தரவுகள் போதுமானதாக இல்லை என்ற காரணங்களின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
நீதிபதி எல். நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்தவர்கள் இந்த ரத்தினால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக உள் இடஒதுகீட்டினை வழங்கி அறிவித்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் இதற்கான அரசாணையை வெளியிட்டார்.
மொத்தமாக 115 பிரிவினர் இடம் பெற்றிருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரே ஒரு பிரிவினருக்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதி என்று இதர பிரிவில் இருந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் என்று 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். தினமும் இந்த வழக்கு நடைபெற வேண்டிய நிலை உருவாகும் என்ற காரணத்தால் வழக்கு மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டது.
“ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் சிறப்பு உள் ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா?” குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி எப்படி மாநில அரசு உள் ஒதுக்கீடு வழங்கும்? என்று கேட்டு உள் ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் உள்ள எந்த சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டினை செயல்படுத்த மாநில அரசுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஏதும் தேவையில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் டி.தணிகாச்சலம் வழங்கிய கடிதம் வன்னியர்களின் சமூக, பொருளாதார பின்னடைவை உறுதி செய்ய போதுமானதாக இல்லை என்றும் ஜனார்தம் கமிட்டி அடிப்படையில் அவர் வெளியிட்ட அறிக்கையை வைத்து இந்த இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த இயலாது என்றும் கூறியது உச்ச நீதிமன்றம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – சீர்மரபினர் வேண்டுகோள்
சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் போது, எடப்பாடி பழனிசாமி, “இந்த சட்டம் தற்காலிகமானதே… முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பிறகு இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
தமிழக சீர்மரபினர் நல சங்கத்தின் மாநில தலைவர் காசிநாதன் இது குறித்து பேசிய போது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பினார். ”பொதுவாகவே எம்.பி.சி. கம்யூனிட்டிக்கான ஒரு ஆணையம் அல்லது அமைப்பு உருவாக்கப்படுதுன்னா அதில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் வன்னியர்களாக இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து அனைத்து மக்களுக்குமான நியாயங்கள் எப்படி வழங்கப்படும்?” என்று கேட்டார் காசிநாதன்.
வன்னியர்கள் அதிகமாக இருக்கும் ஏழு மாவட்டங்களில் சீர்மரபினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதை போன்று தென் மாவட்டங்களில் வன்னியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக தென் தமிழகத்தில் அமைந்திருக்கும் கல்லூரிகளில் டிஎன்சி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மிகவும் சுருங்கிவிட்டது. உண்மையில் வன்னியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அந்த 20 சதவீத இட ஒதுக்கீடும் அவர்களுக்கு அதிக பயன் அளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்று தென் தமிழகத்தில் அமைந்திருக்கும் கல்லூரிகளில் வன்னியர் மாணவர்கள் அதிகம் சேராத போது பெரும்பான்மையான இடங்கள் ஓபன் கோட்டாவாக மாற்றப்படுகிறது. குறைவான இட ஒதுக்கீட்டை கொண்டுள்ள இதர பிரிவினர் இதனால் அதிக அளவு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு விரைவாக இதில் தலையிட்டு முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னர் இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் காசிநாதன்.
போயர், ஒட்டர், குயவர், வண்ணார், வளையர், மீனவர் போன்று பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைந்த மக்களுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. எனவே தமிழக அரசு அவர்களின் வாழ்வை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை பின்பற்றினால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் 10.5% என்பது அரசியல் அமைப்பிற்கு புறம்பானதும், சமூக நீதிக்கு எதிரானதும் கூட. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பாதையை பின்பற்றி 20% என்பதையே மு.க.ஸ்டாலினும் பின்பற்ற வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறினார்.
எங்களின் பெரும்பான்மையான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் தமிழக அரசை மூன்று மாதங்களுக்குள் ஒரு குழு ஒன்றை நியமித்து வன்னியர்களின் பொருளாதார சமூக பின்னடைவு குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு புதிய சட்டத்தை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம் என்று கூறினார் பாமக செய்தித் தொடர்பாளர் பாலு.