டெல்லி : செவிலியர் கல்விக்கான சமூகவியல் பாடத்தில் வரதட்சணைக்கு ஆதரவு தெரிவித்து பெண்களுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்று இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர்களுக்கான சமூகவியல் என்ற தலைப்பில் பாடநூல் ஒன்று செவிலியர்களுக்கான பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. டி.கே. இந்திராணி என்பவரால் எழுதப்பட்டு இருக்கும் இந்த புத்தகம் நோய் மற்றும் நர்ஸிங் ஆகியவற்றுடன் சமூகத்தின் உறவு தொடர்பான கருத்துக்களை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்ட வரைமுறைப்படி எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில் 122 பக்கத்தின் பகுதி 6ல் குறிப்பிடப்பட்டு இருக்கும் வரதட்சணைக்கு ஆதரவான கருத்துக்கள் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெண் கொண்டு வரும் வரதட்சணை மணமக்கள் புதிய வாழ்க்கையை தொடங்க உதவுகிறது என்றும் வீட்டிற்கு தேவையான அனைத்தும் வரதட்சணையாக பெறுவதால் நன்மையே என்று அதில் இடம்பெற்றுள்ளது. மகனுக்கு வரதட்சணை பெற்று மகள் திருமணத்தின் போது, திரும்ப அளித்ததிட வரதட்சணை பேருதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்திற்கும் உச்சமாக அழகு இல்லாத பெண்களுக்கு வரதட்சணை தருவதன் மூலமாகவே திருமணம் நடைபெறுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிற்போக்குதனமான பெண் அடிமைதனத்தை ஊக்குவிக்கும் கருத்துக்கள் அடங்கிய நூலை உன்னதமான பணிகளை செய்யும் செவிலியர் கல்விக்கான பாடத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.