வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லிமா: பெரு நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் போராட்டம் தீவிரமான நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் பெரு நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பெருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாமல், பொட்டாஷ், அம்மோனியா, யூரியா உள்ளிட்ட விவசாய உரங்களின் விலையும் உயர்ந்ததால், விவசாயிகளும் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.
ரஷ்யாவிடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்துவந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரால் இறக்குமதி தடைப்பட்டு விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் உரங்கள் விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 2 வாரங்களாக ஆங்காங்கே நடைபெற்ற இந்த போராட்டம், கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் ஒன்றிணைந்து தலைநகர் லிமாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் சுங்கச்சாவடிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.
போராட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ அமைச்சரவை கூட்டம் நடத்தினார். அதில் போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றிரவு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‛அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏப்ரல் 5ம் தேதி அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரை ஊரடங்கு அமலாக உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
Advertisement