தங்கவயல் : தங்கவயல் தாலுகா விவசாய விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில், முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., ஆதரவு பெற்ற பத்து பேர் இயக்குனர்களாக வெற்றி பெற்றனர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் தோல்வியை தழுவினர். தங்கவயல் தாலுகா விவசாய விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் பத்து இயக்குனர்களை தேர்வு செய்ய, தங்கவயல் அரசு கல்லுாரியில் நேற்று முன் தினம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் இரண்டு அணியினர் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டனர். 26 பேர் களத்தில் இருந்தனர். சங்கத்தில் உறுப்பினராக உள்ள 930 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில், தங்கவயல் முன்னாள் பா.ஜ., – எம்.எல்.ஏ., சம்பங்கியின் ஆதரவாளர்களான பத்து பேரும் வெற்றி பெற்றனர். தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா ஆதரவாளர்கள் பத்து பேரும் தோல்வியை தழுவினர். பொதுப்பிரிவில் சம்பாரசனஹள்ளி கிருஷ்ணமூர்த்தி, கங்கா நல்லுார் நாராயணசாமி பூகானஹள்ளி புருஷோத்தம், அங்கதட்டஹள்ளி லட்சுமிபதி ஆகியோர்; ‘பெண்கள்’ பிரிவில் சொக்கரபண்டே நீலம்மா, பெமல்நகர் சுமா; பிற்படுத்தப்பட்டோர் ‘ஏ’ பிரிவில் சீத்தப்பள்ளி மஞ்சுநாத், பில்லேரஹள்ளி சுஜாதா.எஸ்.சி., பிரிவில், முன்னாள் பா.ஜ., – எம்.எல்.ஏ., சம்பங்கி மகன் பிரவீன்குமார்; ‘பழங்குடியினர்’ பிரிவில் தொட்டகாண்ட்லஹள்ளி நரசிம்மா வெற்றி பெற்றனர். இவர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள்.இந்த தேர்தலில், பொதுத் தேர்தலை மிஞ்சும் வகையில் பிரசாரமும், ஓட்டுக்கு நோட்டும், போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
Advertisement