‘வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையால் வாங்கலாம்’ – செவிலியர் பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு

இந்தியாவில் நர்சிங் படிப்புக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய நர்சிங் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட  சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்று ஒரு தனிப்பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், அனைத்து தரப்பினராலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் வரதட்சணையால் பல ஆயிரம் பெண்கள் வன்முறைகளையும், கொடுமைகளையும் சந்தித்து வருகின்றனர். வரதட்சணை கொடுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் வேதனையில் உளலும் பெண்கள் தொடங்கி, அதை எதிர்த்து துணிந்து நீதிமன்றத்தை நாடும் பெண்கள், அதை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண்கள் என ஒவ்வொரு நாளும் இந்தியாவில் வரதட்சணை ஏற்படுத்தும் தாக்கம் மிகக்கொடுமையானது.
image
இப்படியான சூழலில்தான், கல்லூரி புத்தகமொன்றில் `வரதட்சணையால் கிடைக்கும் நன்மைகள்’ என்ற தலைப்பின்கீழ் சில மோசமான முன்னுதாரணங்கள் பகிரகப்பட்டுள்ளன. அதுவும், இந்திய நர்சிங் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சமூகவியல் பாடப்புத்தகத்தில் இந்த தலைப்பின் கீழான பாடம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் புத்தகம் கூறும் தகவலில், `வரதட்சணை, மிகவும் நன்மை விளைவிக்ககூடியது. ஏனெனில் வீட்டு உபயோகப் பொருட்களான கட்டில், மெத்தை, டி.வி., ஃபேன் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க வரதட்சணை மிகவும் உபயோகமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. டி.கே.இந்திராணி என்பவர் எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தின் 6-வது பாடத்தில் (122-வது பக்கம்) கூறப்பட்டிருக்கும் `வரதட்சணையின் 4 நன்மைகள்:
1. புதிதாக குடும்ப அமைப்புக்குள் உள்நுழைவோருக்கு வரதட்சணை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் ஒரு வீட்டின் அடிப்படை உபயோகப் பொருட்களான கட்டில், மெத்தை, டி.வி., ஃபேன், சின்ன சின்ன பாத்திரங்கள், ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க வரதட்சணை மிகவும் உபயோகமாக இருக்கிறது. அந்தவகையில் இந்தியாவின் ஒரு சில இடங்களில் வாகனங்கள்கூட வரதட்சணையாக பெறப்படுகிறது. இப்படியாக வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் ஒரு வீட்டை கட்டமைக்க உதவுகின்றன.
image
2. பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சொத்துதான் வரதட்சணை. ஒரு பெண், சொத்தில் தன் பங்கையே வரதட்சணையாக பெறுகிறாள்.
3. பெண்ணுக்கு உயர்படிப்பு கிடைக்க, வரதட்சணை உதவுகிறது. ஏனெனில் வரதட்சணையால் ஏற்படும் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பல பெற்றோர் தங்கள் மகள்களை படிக்க வைக்கின்றனர், வேலைக்கும் அனுப்புகின்றனர். இப்படி செய்வதன் மூலம், வரதட்சணை சுமையை அவர்களால் குறைக்க முடிகிறது. இப்படியாக வரதட்சணை மறைமுகமாக பெண்ணின் கல்விக்கு உதவியாக உள்ளது.
4. பார்வைக்கு அழகில்லாத பெண் / ஆணையும்கூட, கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடியும்.
image
இப்படியாக அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவற்றுடன், மணமகன் தரப்பிலிருந்து வரதட்சணை வாங்கப்படுவதற்கான காரணமும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி `மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு, அந்த மகனை பெற்றோர் தங்களின் மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க முடியும். தங்கள் மகளுக்கு எவ்வளவு வரதட்சணை கேட்கப்படுகிறது என்பதை பொறுத்துதான், மகனை திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் நிபந்தனைகள் வைக்கப்படுகிறது’ என்றும் கூறப்பட்டுள்ளது.
புத்தகத்தில் இவை குறிப்பிடப்பட்டிருக்கும் பக்கம் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.