பீஜிங்,-கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் ஷாங்காய் நகருக்கு, 2,000 ராணுவ மருத்துவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை, சீன அரசு அனுப்பி வைத்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும், 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர், புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில், 9,000 பேர், ஷாங்காய் நகரைச் சேர்ந்தோர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஜிலின் மாகாணத்தில், 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை, சீன அரசு துரிதப்படுத்தி உள்ளது. 2.5 கோடி மக்கள் தொகையை உள்ளடக்கிய ஷாங்காயில், ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு பரிசோதனை செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்காக, பிரத்யேக தனிமை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஷாங்காய்க்கு, 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை, சீன அரசு அனுப்பி வைத்துள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஜியாங்சு மற்றும் ஜேஜியாங் மாகாணங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இவர்களில், 2,000 பேர், ராணுவ மருத்துவர்கள்.
புதிய வைரசால் பாதிப்பு
சீனாவில், மரபணு மாறிய, ‘ஒமைக்ரான்’ வைரசின் ஒரு துணை பிரிவான, ‘பி.ஏ., 1.1’ வகை வைரஸ் பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஷாங்காயில் இருந்து, 70 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு நகரில், இந்த வகை வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.