சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்களை முறையே 2022 மார்ச் 11, 22 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று விஷேட கொன்சியூலர் முகாம்களில் வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி, கோவை மாவட்டம் பூலுவப்பட்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், அறச்சலூர், சேலம் மாவட்டம் பவளத்தானூர், மதுரை மாவட்டம் ஆனையூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, புழல் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 11ஆந் திகதி நடாத்தப்பட்ட விஷேட முகாமில் 101 இலங்கையர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், திருவண்ணாமலை மாவட்டம் தவசி, மதுரை மாவட்டம் ஊச்சப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் அதியனூத்து, புதுப்பட்டி ஆகிய இடங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மார்ச் 22ஆந் திகதி 158 குடியுரிமைச் சான்றிதழ்களும், 17 பிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மார்ச் 29ஆந் திகதி நடாத்தப்பட்ட விஷேட முகாமில், புதுக்கோட்டை மாவட்டம் அலியானிலை, கோட்டப்பட்டு, திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் கலந்து கொண்டு, 157 குடியுரிமைச் சான்றிதழ்களும், 09 பிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், இந்தத் தூதரகமும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரும் இணைந்து நடாத்தும் தன்னார்வமாக தாயகம் திரும்பும் செயன்முறையில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 34 ஆர்.ஆர்.பி. (அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம்) கடவுச்சீட்டுக்களும் இதே முகாமில் வழங்கப்பட்டன.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2022 ஏப்ரல் 04