சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி வைகை ஆற்றில் நடைபெறாமல் அழகர் கோவிலில் உள்ள கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இதனால் மழை வளம் இல்லை. மதுரை செழிப்பாக இல்லை என பக்தர்கள் வேதனைபட்டு வந்தனர். அவர்களது மனக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானாக திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
14-ந்தேதி (வியாழக்கிழமை) மாலையில் தங்கப் பல்லக்கில கள்ளர் திருக்கோலம் பூண்டு சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
15-ந்தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். தொடர்ந்து புதூர், ரிசர்வ் லைன் மற்றும் அவுட்போஸ்ட் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலையில் அம்பலக்காரர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கும் கள்ளழகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றிக் கொள்கிறார்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் பங்கேற்கும் கள்ளழகர் 16-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து ஆயிரம்பொன் சப்பரத்தில் புறப்பட்டு கருப்பண்ணசாமி கோவில் வருகிறார். அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு காலை 5.50 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு தற்போது அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர் ராம ராயர் மண்டபம், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில், தேனூர் மண்டபம், அனுமார் கோவில் போன்றவற்றில் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது. 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சிகள் நடக்கின்றன.
18-ந்தேதி மோகினி அவதாரத்தில் உலாவரும் கள்ளழகர் அதன் பின்னர் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 19-ந்தேதி மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலை நோக்கி புறப்பட்டு செல்கிறது. வழி நெடுக அவருக்கு பக்தர்கள் வரவேற்பு கொடுக்கின்றனர். 20-ந்தேதி காலை அழகர் மலை செல்லும் கள்ளழகருக்கு மறுநாள் 21-ந்தேதி உற்சவ சாந்தி நடைபெறுகிறது. இத்துடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
சித்திரை திருவிழாவிற்காக மதுரை வரும் கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள். இதனால் பல இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அவர்கள் அழகர் எங்கு வருகிறார். இங்கு எப்போது வருவார்? என கேள்வி கணைகளை தாங்கி நிற்பார்கள். இவர்களது வசதிக்காக ‘டிராக் அழகர்’ செயலி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கோவிலில் இருந்து புறப்பட்டு வரும் அழகர் மீண்டும் தன் இருப்பிடம் செல்லும் வரை எங்கு இருக்கிறார்? என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும்.
இதையும் படிக்கலாம்…
சமூக அந்தஸ்து தரும் சச யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்