புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நேரடி விசாரணை உடனடியாக நிறுத்தப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. தற்போது தொற்று குறைந்துள்ள சூழலில் படிப்படியாக நீதிமன்ற விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. இந்த நிலையில், ‘உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 4ம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்’ என கடந்த 30ம் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்திருந்தார். அதன்படி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று உச்ச நீதிமன்றத்தில் அனைத்து விசாரணை அறைகளிலும் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டது. அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி விசாரணை நடத்தப்பட்டதால், உச்ச நீதிமன்ற வளாகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.