ராகுல் காந்தி
இந்த நாட்டுக்கு மிக மிக அவசியம். அவருக்கு எனது சொத்துக்களை எழுதி வைக்கிறேன் என்று கூறி அசரடித்துள்ளார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது பாட்டி ஒருவர். இவர் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தனது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும் ராகுல் காந்தி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். கூடவே 10 பவுன் தங்க நகையையும் அவர் ராகுல் காந்திக்கு எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பான ஆவணங்களை அவர் டேராடூனில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரீத்தம் சிங்கிடம் நேரிலேயே கொடுத்துள்ளார்.
இந்தப் பாட்டியின் பெயர்
புஷ்பா முஞ்சால்
. இவருக்கு ராகுல் காந்தி என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அவர் மாதிரியான தலைவர்கள்தான் நாட்டுக்குத் தேவை என்பது பாட்டியின் அசைக்க முடியாத கருத்து. இவருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது. கூடவே பத்து பவுன் நகையையும் பாட்டி வைத்துள்ளார். எல்லாம் இவரே சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள்.
இந்த சொத்துக்கள் தனக்குப் பின்னால் யாருடையே கைகளுக்குப் போய் வீணாவதை விட ராகுல் காந்திக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார் புஷ்பா பாட்டி. உடனே இதுகுறித்து ஒரு உயில் எழுதி விட்டார். தனது சொத்துக்கள் அனைத்தும் தனக்குப் பின்னால் ராகுல் காந்திக்குத்தான் என்று அதில் கூறியுள்ளார். இந்த உயிலை டேராடூன் கோர்ட்டிலும் அவர் தனது வக்கீல் மூலம் தாக்கல் செய்தார். தற்போது மாநில காங்கிரஸ் தலைவரிடம் நேரிலும் போய் ஆவணங்களைக் கொடுத்துள்ளார்.
ஏன் பாட்டி இப்படி என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராகுல் காந்திதான் இந்த நாட்டுக்குத் தேவை. அவரது கொள்கைகளும், அவரது வழிகாட்டுதலும் இந்த நாட்டுக்குத் தேவை. எனக்கு ராகுல் காந்தியின் சிந்தனைகள் மிகவும் பிடிக்கும். அதனால்தான் எனது சொத்துக்களை அவருக்கே எழுதி வைத்து விட்டேன் என்றார் அவர்.
டேராடூன் புஷ்பா பாட்டி தனது சொத்துக்களை ராகுல் காந்திக்கு எழுதியிருப்பது காங்கிரஸாரிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த பாட்டியின் செயல் நாடு முழுவதும் வைரலாகியுள்ளது. இந்த பாட்டியின் செயல் குறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், அன்பை அன்பே அறியும் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புஷ்பா பாட்டி தனது சொத்துக்களை தன் பெயரில் எழுதி வைத்திருப்பது குறித்து ராகுல் காந்தி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் புஷ்பா பாட்டியை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வந்தாலும் கூட ராகுல் காந்தி மீது மக்கள் பலரும் மிகுந்த பிரியமும், அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ளனர் என்பதையே புஷ்பா பாட்டியின் செயல் காட்டுவதாக காங்கிரஸார் பெருமையுடன் கூறுகின்றனர்.
அடுத்த செய்தி”கறிக் கடையை மூடுங்க”.. பாஜக மேயர்கள் அதிரடி.. “எங்க கிட்ட வாங்க”.. திமுக அழைப்பு!