புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஆயிரத்துக்குள் வந்துள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது 715 நாட்களுக்கு பின், அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதிக்கு பின் ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,044 ஆக அதிகரித்துள்ளது. 715 நாட்களில் மிக குறைந்த தொற்று பாதிப்பாகும். கேரளாவில் தொற்று பாதித்த 8 பேர் உட்பட மொத்தம் 13 உயிரிழப்புக்கள் பதிவானதை அடுத்து கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,21,358ஆக உயர்ந்துள்ளது. சிகிக்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 13,000க்கும் கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.