அந்த செடன் பார்க் மைதானம் முழுவதுமே நெகிழ்ச்சியாலும் பூரிப்பாலும் நிறைந்திருந்தது. சக வீரர்கள், ரசிகர்கள், உற்றார் உறவினர்கள் என அத்தனை பேரின் கண்களிலும் வழியனுப்புதலுக்கே உரிய ஏக்கநீர் சுரந்திருந்தது. ஒவ்வொருவரின் மனமும் எதோ ஒரு பழைய நிகழ்வை நோக்கிய காலப்பயணத்தில் மிதந்துக்கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காரணமான ராஸ் டெய்லரும் அடக்க முடியாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார்.
17 ஆண்டுகளாக 450 போட்டிகளாக நியூசிலாந்து அணிக்காக விடாமல் பணி செய்திருக்கும் ராஸ் டெய்லர் தனது பயணத்தின் கடைசி நிறுத்தமாக நெதர்லாந்துக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெற்றிருக்கிறார். அந்த நிகழ்வின் இறுதி நிமிடங்கள்தான் மேலே கூறியவை.
ராஸ் டெய்லர், ஒரு தலைமுறையையே மொத்தமாக ஆட்கொண்ட சூப்பர் ஸ்டாராக, கடவுளாகக் கொண்டாடப்பட்டவர் இல்லை. ஆனால், அத்தனை நாட்டு கிரிக்கெட் பிரியர்களாலும் ரசிக்கப்பட்டவர். கிரிக்கெட் புக்கைக் கரைத்து குடித்த மேதை இல்லை. ஆனால், தனக்கே தனக்கான கற்பிதங்களோடும் புரிதல்களோடும் ஒரு வட்டத்திற்குள்ளேயே நின்று வானத்தை அளந்தவர். நியூசிலாந்து மாதிரியான கிரிக்கெட் முதன்மை விளையாட்டாக இல்லாத நாடுகளில் அந்த விளையாட்டின் வேரை ஆழமாக ஊன்ற வெற்றிகளும் சாதனைகளும் அதிகப்படியாகத் தேவைப்படும். அவற்றை பெற்றுத்தர மார்ட்டின் க்ரோ, இயான் ஸ்மித், ஃப்ளெம்மிங், மெக்கல்லம், வில்லியம்சன் போன்ற தலைமைகள் மட்டுமே போதாது. அவர்களின் கனவுகளை எண்ணங்களை சாத்தியமாக்க ராஸ் டெய்லர்கள் போன்ற தளபதிகளும் கட்டாயம் தேவை.
உலக அளவில் மூன்று ஃபார்மெட்களிலும் 100 போட்டிகளுக்கு மேல் ஆடிய முதல் வீரர் எனும் சாதனையை ராஸ் டெய்லரே செய்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகள், ஓடிஐ போட்டிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளிலும் அதிக ரன்களை அடித்திருப்பவர் ராஸ் டெய்லரே.
டெஸ்ட் போட்டிகளில் 7500க்கு அதிகமான ரன்களையும், ஓடிஐ போட்டிகளில் 8500க்கும் அதிகமான ரன்களையும் அடித்திருக்கிறார்.
சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்திருக்கும் நியூசிலாந்து வீரரும் ராஸ் டெய்லரே.
இதெல்லாம் ஒரு சாம்பிள் மட்டும்தான். நியூசிலாந்தின் கிரிக்கெட் வரைபடத்தில் ஒரு பெரும்பகுதியை ராஸ் டெய்லர் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார். அந்த ஆக்கிரமிப்பிற்கு ராஸ் டெய்லரின் முந்தைய தலைமுறை வீரர்களுமே பெரிதாக உதவியிருக்கின்றனர். குறிப்பாக, மார்ட்டின் க்ரோ. ராஸ் டெய்லரை பற்றிப் பேசுகையில் மார்ட்டின் க்ரோவைத் தவிர்க்கவே முடியாது.
ராஸ் டெய்லரின் ஆட்டத்தை முதன்முறையாக பார்த்த மார்ட்டின் க்ரோ ‘He was nothing but a Dirty Slogger’ எனக் கலாய்த்திருக்கிறார். Dirty Slogger என்ற வார்த்தை கொஞ்சம் நக்கலாகத் தெரிந்தாலும் ராஸ் டெய்லர் கடைசி வரைக்குமே அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார். கிரிக்கெட் புக்கில் இருக்கும் பெரும்பாலான ஷாட்களை அவரின் ஆட்டத்தில் காண முடியாது. மிட் விக்கெட்டின் தலைக்கு மேல் பொளேரென அடிக்கும் அந்த ஒரு ஷாட்தான் ராஸ் டெய்லரின் அடையாளம். அதைத்தான் பிரதானமாக ஆடுவார். இதுபோக ஸ்லாக் ஸ்வீப் மற்றும் சில கட் ஷாட்கள். இவை மட்டும்தான் ராஸ் டெய்லரின் ஆட்டத்தில் நிறைந்து இருக்கும். இதுதான் ராஸ் டெய்லரின் மீதான பிரமிப்பை இன்னும் கூடுதல் ஆக்குகிறது.
ஒற்றைத் தன்மையோடு பெரிதாக நவீன மாற்றங்களை சுவீகரித்துக் கொள்ளாமல் வலுவாக அடிப்பதை மட்டுமே நம்பியிருந்து சாதித்திருக்கிறார். 2006 முதல் இப்போது வரைக்குமே கூட அவரது பேக்கில் பெரிதாக வேறு ஷாட்கள் இருந்ததே இல்லை. நெதர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் கூட ராஸ் டெய்லர் அடித்த அந்த ஒரே சிக்சரும் மிட் விக்கெட் மேல் பொளேரென அடிக்கப்பட்டதுதான். சிறுவயதில் ஹாக்கி ஆடியதாலும் ஹாக்கி பந்துகளையே வைத்து அதிகம் பயிற்சி செய்ததாலும் அந்தத் தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஷாட் டெய்லரிடம் வலுவாக வேரூன்றியிருந்தது.
ஆனால், மார்டின் க்ரோ கூறிய அந்த Dirtiness-தான் ராஸ் டெய்லருக்கு அழகே!
முதல் முறை ராஸ் டெய்லரை மார்ட்டின் க்ரோ இப்படி வாரியிருந்தாலும் அதன்பிறகு, மார்ட்டின் க்ரோ மரணிக்கும் வரை ராஸ் டெய்லருக்கு தோளோடு தோளாக நல்ல மென்ட்டராக இருந்தார். லிமிடெட் கிரிக்கெட்டராக மட்டுமே தன்னை உணர்ந்த ராஸ் டெய்லரை, நீ அது மட்டுமில்லை. உன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டும் ஆட முடியும் எனக்கூறி ராஸ் டெய்லரை டெஸ்ட் கிரிக்கெட்டராகவும் மாற்றிய பெருமை மார்ட்டின் க்ரோவையே சேரும். டெஸ்ட் போட்டிகளில் தன்னைவிட டெய்லர் ஒரு சதத்தை கூடுதலாக அடிக்க வேண்டும் என க்ரோ விரும்பினார். அப்படி அடித்தால் அதை க்ரோவிற்கே டெடிக்கேட் செய்ய வேண்டும் என டெய்லர் விரும்பினார். இரண்டு விருப்பங்களுமே நிறைவேறின. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆவேனா எனச் சந்தேகப்பட்ட ராஸ் டெய்லர்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்காக வின்னிங் ஷாட்டை அடித்திருந்தார். ஆனால், இதையெல்லாம் காண மார்ட்டின் க்ரோ உயிருடன் இல்லை. இது ராஸ் டெய்லரை பெரும் வேதனைக்குள்ளாக்கியது. கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் இந்தக் கடைசி நொடி வரை ராஸ் டெய்லர் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் மார்ட்டின் க்ரோவை நினைவுகூர்ந்து கொண்டேதான் இருந்தார்.
எனக் கூறி அவர் எங்கும் நிறைந்திருப்பதாக ராஸ் டெய்லர் கூறுவார். அன்று செடன் பார்க்கிலும் வண்ணத்துப்பூச்சிகள் பறந்திருக்கக்கூடும்!
என்னதான் ராஸ் டெய்லர் மூன்று ஃபார்மட்டில் ஆடக்கூடிய வீரராக இருந்தாலும் அவரது பெஸ்ட் என்பது ஓடிஐ போட்டிகளிலேயே வெளிப்பட்டிருக்கிறது. அணிக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் முன் வரிசையில் நின்று பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்.
ஃப்ளெம்மிங், வெட்டோரி, மெக்கல்லம், வில்லியம்சன் என வெவ்வேறான தலைமைகளின் கீழ் ஆடியிருக்கிறார். ஆனால், அத்தனை கேப்டன்களுமே தங்கள் அணியின் மிடில் ஆர்டர் ராஸ் டெய்லரை பிரதானப்படுத்தி இருப்பதையே அதிகம் விரும்பினர்.
இந்தக் காலகட்டங்களில் அதிரடி சூறாவளியாக ஆடிய பல வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு ஆடியிருக்கிறார்கள். டாப் ஆர்டரில் மாற்றம் இருந்திருக்கிறது. லோயர் மிடில் ஆர்டரில் மாற்றம் இருந்திருக்கிறது. ஆனால், அந்த நம்பர் 4 என்றைக்குமே ராஸ் டெய்லருடையதுதான். கடைசி போட்டி வரை அதில் எந்த மாற்றமும் இருந்திருக்கவில்லை.
2009-10 காலகட்டங்களில் இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் முக்கியமான வீரராக இருந்தார். ஒரு போட்டியிலெல்லாம் ராஸ் டெய்லர் 95 ரன்களை எடுக்க இந்திய அணியே 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும்.
2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோயப் அக்தரை அலறவிட்டிருப்பார். அந்தப் போட்டியில் சதமடித்திருப்பார். கடைசியில் வெறும் 16 பந்துகளில் 62 ரன்களை அடித்திருப்பார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் பந்துவீச்சு படையுமே அரண்டு போயிருந்தது.
2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இக்கட்டான சூழலில் ஆடிய பொறுப்பான ஆட்டம் எனக் கடந்த டிகேடின் கிரிக்கெட் நினைவுகளில் ராஸ் டெய்லருக்கென்றும் தனி இடம் இருக்கவே செய்கிறது.
என ராஸ் டெய்லரின் பிரிவு உபசார விழாவில் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் தலைவர் மார்ட்டின் ஸ்நெடன் பேசியிருந்தார். ராஸ் டெய்லரை பற்றிப் பேசும்போது இளம் வீரர் இஷ் சோதியே கண்ணீர் விடுகிறார். சூப்பர் சீனியராக இருந்தபோதும் இளம் வீரர்களிடம் எந்த மனத்தடையுமின்றி பழகியிருக்கிறார். எந்தக் கொண்டாட்டமும் அவரின் இயல்பை குலைத்ததே இல்லை. சதமடித்தாலும் சரி, சாம்பியன்ஷிப்பை வென்றாலும் சரி, Tongue out செய்வதுதான் அவரின் அதிகபட்ச கொண்டாட்டமாக இருந்திருக்கிறது.
மார்ட்டின் ஸ்நெடன் தனது உரையை முடித்துவிட்டு ராஸ் டெய்லருக்கு நினைவுப்பரிசை வழங்கியிருந்தார். சாமோன் பழங்குடி வழிவந்த ராஸ் டெய்லருக்கு பாரம்பரியமிக்க சாமோன் மாலையை ஸ்நெடன் அணிவித்து கௌரவித்தார்.
சாமோன் பழங்குடியின மரபுப்படி இந்த மாலையை கழுத்தில் அணிந்திருப்பவர்கள் ‘வேட்டைக்கு சென்று வெற்றியுடன் திரும்புபவராகவும்’, ‘ஒரு கூட்டத்தின் முதன்மையானவனாகவும்’ கருதப்படுவர். நியூசிலாந்து கிரிக்கெட்டின் சாமோன் மாலையை அணிந்துக்கொள்ள ராஸ் டெய்லரை விட பொருத்தமான வீரர் வேறு யார்?
அந்த மிட்விக்கெட் பொளேர் சிக்சர்களுக்கும் மென்சிரிப்பிற்கும் நன்றி ராஸ்!