எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கும் தறுவாயில் கிடைக்கும் வெற்றியைவிட மிகச்சிறந்த வெற்றி என்பது ஒன்றுமே இல்லை. ஐந்து விக்கெட்டுக்களை இழந்தபின்னர், எப்படியும் இன்று அவ்ளோதான் என பெங்களூரு ரசிகர்கள் ‘வலிக்கலியே’ மோடுக்குச் சென்ற போது, தினேஷ் கார்த்திக்கும், ஷபாஷ் அகமதும் ஆடிய ஆட்டம் அவர்களை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருக்கிறது. இருவரும் 30 நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள்.
டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸி சேஸிங் தேர்வு செய்தார். அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த முறையும் ராஜஸ்தான் மூன்று அயல்நாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் XI: பட்லர், ஜெய்ஸ்வால், படிக்கல், சாம்சன், ஹெட்மெயர், ரியான் பராக், அஷ்வின், போல்ட், சைனி, பிரசித் கிருஷ்ணா, சஹால்
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு XI: டு ப்ளெஸ்ஸி, கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ரூதர்ஃபோர்டு, ஷபாஷ் அகமத், ஹஸரங்கா, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, சிராஜ், ஆகாஷ் தீப்.
கடந்த போட்டியில் சதம் கண்டிருந்த பட்லர் அதே வேகத்துடன் ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் ஆட வந்தார். இரண்டாவது ஓவரிலேயே வில்லியின் ஓவரில் போல்டாகி வெளியேறினார் ஜெய்ஸ்வால். விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாகி இருக்கிறார் ஜெய்ஸ்வால். ஒன் டவுன் வந்த படிக்கல், அடித்து ஆடத் தொடங்கினார். சிராஜ் பந்தில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ்; வில்லியின் பந்தில் ஷாட் தேர்ட் மேன் பக்கம் ஒரு பவுண்டரி என அவ்வப்போது அடித்தார். பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.
ஆகாஷ் தீப் வீசிய பந்தை, பட்லர் தூக்கி அடிக்க முயல அது டீப் மிட்விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த வில்லி பக்கம் சென்றது. கொஞ்சம் கடினமானகேட்ச் தான் என்றாலும், அதை பிடித்திருக்கலாம் வில்லி. ஆனால், மிஸ் செய்துவிட்டார். அடுத்த பந்தை லாங் ஆஃப் பக்கம், சிக்ஸருக்கு விளாசினார் பட்லர். அடுத்து வில்லி வீசிய ஓவரில் படிக்கல் பவுண்டரி, சிக்ஸர் என அடிக்க ஒரே ஓவரில் 14 ரன்கள்.
ஹர்சல் படேலின் ஓவரில் படிக்கல் கோலியிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார். ஹசரங்கா வீசிய பந்தை, லாங் ஆனில் சிக்ஸருக்கு விளாசிய அதே ஓவரில், ஹசராங்காவிடமே கேட்ச் கொடுத்து கேப்டன் சஞ்சு சாம்சனும் விடைபெற்றார். 18 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். கடந்த போட்டியில் சதம் அடித்த பட்லர்கூட இந்த முறை 40 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இவ்வளவு குறைவான ஸ்கோரை சேஸ் செய்வதில் என்ன த்ரில், என்ன என்டெர்டெய்ன்மெண்ட் இருக்கப் போகிறது என நினைத்த ஆர்சிபி பௌலர்கள் அடுத்த இரண்டு ஓவர்களில் தாங்கள் கற்றுவைத்த மொத்த வித்தையையும் இறக்கினார்கள். அதாவது தங்களின் பழைய ஃபார்முக்குத் திரும்பிவந்து ரன்களை வாரி வழங்கினார்கள்.
சிராஜ் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அரைசதம் கடந்தார் பட்லர். 19 ஓவர் என்பதால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். அப்ப 20வது ஓவரில் என்ன 20 ரன்களா என்கிறீர்களா, அதுதான் இல்லை. 23 ரன்கள்! ஆகாஷ் தீப் இரண்டாவது பந்தை நோபாலாக வீச, ஃப்ரீ ஹிட். லாங் ஆன் பக்கம் ஒரு சிக்ஸ். அடுத்த பந்திலும் சிக்ஸ். 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் இன்னொரு சாதனையையும் நிகழ்த்தியிருந்தார். பவுண்டரி இல்லாமல் 70 ரன்கள் டி20யில் அடித்த முதல் வீரர் பட்லர்தான். எல்லாவற்றையும் சிக்ஸர்களாக மட்டுமே மாற்றிக்கொண்டிருந்தார். ஹெட்மெயர் தன் பங்குக்கு ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு சிக்ஸ். அதே 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் என இன்னிங்ஸை முடித்தது ராஜஸ்தான்.
அனுஜ் ராவத்தும், டு ப்பெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கினார்கள். பிரசித் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, போல்ட் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் 16 ரன்கள் எனச் சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர் இருவரும். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்து அசத்தினர் பெங்களூரு ஓப்பனர்கள். முந்தைய சீசன்களில் பெங்களூருக்காக ஆடிய படிக்கல் பேட்டிங்கில் பழி தீர்க்க, இது சஹாலின் டர்ன்.
ஆர்சிபி அணி நிர்வாகம் விருப்பப்பட்டிருந்தால் அங்கேயே இருந்திருப்பேன் என தன் மன சோர்வை ஏற்கெனவே வெளிப்படித்தியிருந்தார் சஹால். முதல் ஓவரிலேயே டுப்ளெஸ்ஸியை வெளியேற்றினார். சஹால் வீசிய அடுத்த ஓவரில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வில்லி ஸ்கொயர் லெக் பக்கம் பந்தை அடித்து சிங்கிளுக்கு நகர்ந்தார். கோலி வேகமாக வர, வில்லி வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். கோலி திரும்பி வருவதற்குள் ஒரு நொடிப் பொழுதில் ஸ்டம்பை தட்டிவிட்டார் சஹால். ‘கோலியை அனுப்பிவிட்டோமே’ என மனம் நொந்த வில்லி, அடுத்த பந்திலேயே அவரும் போல்டானார்.
யப்பா… மேக்ஸ்வெல்ல அடுத்த போட்டியிலாவது அனுப்பங்களேன் எனக் கடுப்பாக ஆரம்பித்தனர் பெங்களூரு ரசிகர்கள். சஹால் விக்கெட் எடுத்துக்கொண்டிருந்த போது, “உங்கள் பழைய காதலர் உங்களைப் பழி தீர்க்க வந்தால் எப்படி இருக்கும்” என நக்கலாக ட்விட் செய்தது ராஜஸ்தான் ட்விட்டர் அக்கௌண்ட்.
நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் களம் இறங்கினார் ரூதர்ஃபோர்டு. தேவைப்படும் ரன் ரேட் எவ்வளவு ஏறினாலும் கவலையில்லை என்பதாக ஆடினார் ரூதர்ஃபோர்டு. ‘மெல்ல மெல்ல 50 ஓவர் இருக்கு பாரு, சிங்கிள் தட்டியே ஜெயிச்சிடலாம்’ என உச் கொட்டினர் பெங்களூரு ரசிகர்கள். சைனி ஓவரில் ஷபாஷ் அகமது ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து போட்டியில் இன்னும் உயிர் இருக்கு என்பதை நிரூபித்தார். ஆனால், அடுத்த போல்ட் ஓவரில் ரூதர்ஃபோர்டும் அவுட்.
வந்தார் தினேஷ் கார்த்திக். ஓவருக்குக் கிட்டத்தட்ட 12 ரன்கள் தேவை. அஷ்வின் பந்துவீசினார். அஷ்வின் வீசிய கேரம் பாலை பேக்வேர்டு ஸ்கொயர் பக்கம் பவுண்டரிக்கு அனுப்பினார் டிகே. அது நோபால் வேறு. லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ். அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 21 ரன்கள். முடிந்த போட்டியை ஆக்ஸிஜன் செலுத்தி மீண்டும் உயிர்த்தெழ வைத்தார் டிகே.
அடுத்து சைனி வீசப் போகும் பந்தை முன்னரே கணித்துவிட்ட டிகே, கூலாக பேக்வேர்டு ஸ்கொயர் பக்கம் ஒரு லேப்ஸ்வீப் அடித்தார். “Whatever you are doing stop that and watch this” என்றார் வர்ணனையாளர். இரண்டு பவுண்டரிகள். ஆறாவது பந்தில் சைனி செய்தது மாபெரும் தவறு… ஃபீல்ட் செட்டப்பை ஒரு பக்கம் நிறுத்திவிட்டு, ஏதோ யோசனையில் ஆள் இல்லாத பக்கம் பந்தை போட்டுக் கொடுத்தார். இன்னொரு பவுண்டரியை அள்ளினார் டிகே. இந்த ஓவரில் 16 ரன்கள். இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 37 ரன்கள். ராஜஸ்தானுக்கு ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்கள் எப்படி ஆட்டத்தின் போக்கையே மாற்றியதோ, அப்படி பெங்களூருக்கு இந்த இரண்டு ஓவர்களும் அமைந்தன. அடுத்து வீசிய பிரசித் கிருஷ்ணா ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள்.
சஹால் தன் நான்காவது ஓவரை வீச வந்தார். ஆனால் சஹால் கொஞ்சம் முன்னரே பந்துவீச வந்திருக்க வேண்டும். இந்த ஓவரில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஆடினர் ஷபாஷும், கார்த்திக்கும். அடுத்த போல்ட் ஓவரில் ஷபாஷ் செய்தது சற்றே அதீதம் என்று தோன்றியது. முதல் பந்தை ஸ்கூப் செய்ய முயன்றார். ஆனால் கனெக்ட் செய்ய முடியவில்லை. பவுண்டரி, சிக்ஸர் எல்லாம் அடித்துவிட்டு மீண்டும் ஸ்கூப் ஆட முயன்றார். போல்ட்டின் அனுபவ பந்துவீச்சால், அந்தப் பந்து சற்று விலகி கிளவில் பட்டு ஸ்டம்பைத் தகர்த்தது.
ஆறு பந்துகளில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் அடித்து பிரமாண்டமாக ஆட்டத்தை முடித்து வைத்தார் ஹர்சல் படேல்.
ஆட்டத்தை தன் வசப்படுத்திய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வர்ணனையாளராக பணியாற்றிய இந்த ஃபினிஷர், இன்னும் தன்னுள் கிரிக்கெட் இருக்கிறது என்பதை கிரிக்கெட் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார். குறிப்பாக, ஆர்சிபி இத்தனை வருடங்களாகத் தேடிய அந்த ஃபினிஷர் டிகே-தான் என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி பதிவு செய்யும் நூறாவது வெற்றி இது.