அடுத்து நிலக்கரி: ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு; விலை உயரும் ஆபத்து?

லண்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டின் நிலக்கரிக்கு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிலக்கரி விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவை புறக்கணித்து வருகின்றன. இதனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது. அதேசமயம் ரஷ்ய கச்சா எண்ணெய் தடையால் ஐரோப்பிய நாடுகளும் பாதித்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விநியோகம் செய்கிறது. குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிகஅளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்கிறது.

ரஷ்யாவின் 12% எண்ணெய் ஏற்றுமதியில் பயன்பெறும் முக்கிய நாடாக ஜெர்மனி உள்ளது. அதன் மொத்த எரிபொருள் தேவைக்காக 40% ரஷ்யாவையே நம்பியுள்ளது. அதே போன்று இயற்கை எரிவாயு தேவைக்காகவும் ஜெர்மனி ரஷ்யாவை அதிகம் நம்பியுள்ளது.

ஜெர்மனி 25 சதவீதத்துக்கும் அதிகமாக இயற்கை எரிவாயுவை நம்பியுள்ளது. அதுவும் ரஷ்யாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு குழாய்கள் மூலமே ஜெர்மனியை வந்தடைகிறது. வேறு வழிகளில் ஜெர்மனி எரிவாயுவை பெறவும் வாய்ப்பில்லை. இதனால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதை தடுக்க வேண்டாம் என ஜெர்மனி கூறி வருகிறது. எனினும் உக்ரைன் மீது நடைபெறும் தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் ஜெர்மனிக்கு மற்ற ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவுடன் நட்பற்ற நாடுகள், கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு விற்பனைக்கு டாலருக்கு பதில் இனிமேல் ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்று அதிபர் புதினின் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகள் வெளிப்படையான போர்க்குற்றங்களை இழைத்ததாக வெளியான தகவல்களால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நிலக்கரி மீதான தடையால் ஒரு வருடத்திற்கு 4.4 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட வர்த்தகத்தை ரஷ்யா இழக்கும். எனினும் புதிய ஒப்பந்தங்களைத் தடை செய்வதற்கு முன் மூன்று மாத கால அனுமதி வழங்கப்படும். ஒப்பந்தபடி ஏற்கெனவே ரஷ்யா அனுப்பி விட்ட நிலக்கரிக்கும் இந்த தடை பொருந்தாது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் விவாதித்து இதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவார்கள். பெரும்பாலான ரஷ்ய ட்ரக்குகள் மற்றும் கப்பல்கள்நுழைவதை தடை செய்யும் உத்தரவையும் ஐரோப்பிய யூனியன் முன்மொழிகிறது. அதேசமயம் விவசாய பொருட்கள், மனிதாபிமான எரிபொருள் உதவிக்கு விதிவிலக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யாவின் எரிபொருளை தடை செய்யும் ஐரோப்பிய யூனியனின் முயற்சிகளை முன்பு தடுத்த ஜெர்மனி, ரஷ்ய நிலக்கரி தடையை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடை குறித்து ஐரோப்பிய யூனியனுடன் விவாதித்து வருவதாகவும் தெரிகிறது.

வடமேற்கு ஐரோப்பாவிற்கு, ரஷ்யா தெர்மல் நிலக்கரியில் பாதியை வழங்குகிறது. இதன் மூலமே அங்குள்ள மின் நிலையங்களுக்கு எரிபொருளாகவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி விலை 7.9% உயர்ந்து ஒரு டன் 205 டன்களாக இருந்தது.

ரஷ்யாவுக்கு அதிகமான பொருளாதார வலியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே முழுமையான கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

கச்சா எண்ணெய்க்கு முழுமையாக தடை விதிக்கும் முடிவில் ஒத்த கருத்து ஏற்படவில்லை. ஜெர்மனி மற்றும் ஹங்கேரி உட்பட பல அரசுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய எண்ணெயை படிப்படியாக மட்டுமே குறைக்க முடியும் என இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.