பெங்களூரு : ”நாட்டிலேயே அதிக உறுப்பினர் கொண்ட கட்சியாக பா.ஜ., வளர்ந்துள்ளது,” என பா.ஜ., தேசிய பொது செயலர் ரவி தெரிவித்தார்.பா.ஜ., நிறுவிய நாளை ஒட்டி, மல்லேஸ்வரம் காடு மல்லேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.கட்சியின் தேசிய பொது செயலர் ரவி பேசியதாவது:
இந்த கட்சியை 10 தொண்டர்களுடன் ஷியாம் பிரசாத் முகர்ஜி துவக்கினார். அப்போது, இதற்கு பெயர், பாரதிய ஜன சங்க். ஷியாம் பிரசாத் முகர்ஜியைத் தவிர, வேறு யாருக்கும் நாடு தழுவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் இல்லை.பத்து தொண்டர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி தான் இப்போது, உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாகவும், 18 கோடி உறுப்பினர்கள், அதிக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.
அதிக பெண் எம்.எல்.ஏ.,க்களையும், அதிக தலித் எம்.எல்.ஏ.,க்களையும் பெற்ற பெருமை எங்கள் கட்சிக்கு உண்டு. உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.நாட்டின் கலாசாரம், தேசியவாதம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை, இறையாண்மை, மதிப்பு அடிப்படையிலான அரசியல் கொள்கையுடன் கட்சி செயல்படுகிறது.குறிப்பிட்ட காலத்தில் உள்கட்சி தேர்தல் நடத்தி, கட்சிக்குள் ஜனநாயகத்தை பராமரிக்கும் ஒரே கட்சி, எங்கள் கட்சி தான்.இன்று நாடு முழுவதும் 10 லட்சம் பூத் தலைவர்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்றியுள்ளனர்.நாடு முதன்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் எங்கள் கட்சி செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement