முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் இடதுசாரிக் கட்சிகள் தடைசெய்யப்பட்ட பாதையிலேயே அரசாங்கமும் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஜே.வி.பி மீது குற்றம் சாட்டி நீங்கள் அதையே செய்கிறீர்கள்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நடத்தை பேரழிவிற்கு வழிவகுக்கும், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அவசரநிலை பிரகடனத்தை திரும்பப் பெறுவது வாக்கெடுப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் போதெல்லாம், அது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்,
அதைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த பயப்படக்கூடும்,
ஆனால் அவசரகால பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தும் அரசியலமைப்பு கடமையிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது, ”என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் பரவிய போராட்டங்களுக்கு மத்தியில் ஏப்ரல் 1ம் திகதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், 5ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அவசரநிலை பிரகடனத்தை ஜனாதிபதி இரத்துச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.