புதுடெல்லி: பாஜ.வின் 42வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் இடையே பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆற்றிய உரையில் கூறியதாவது; வம்சாவளியாக வரும் கட்சிகள் குடும்பத்தின் ஆட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன. அவர்களுக்கு குடும்ப பக்தி மட்டுமே உண்டு. அரசியல் அமைப்பு நெறிமுறைகளை சிறிதும் பொருட்படுத்துவது கிடையாது. இவர்கள் தேசிய அளவில் அல்லது மாநிலங்களில் ஆட்சிக்கு வரும்போது உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பாஜ மட்டுமே அவர்களுக்கு சவால் விடுத்து இதனை தேர்தல் பிரச்னையாக மாற்றியுள்ளது. அவர்கள் திறமை வாய்ந்த இளைஞர்களை முன்னேறுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. பாஜ தலைமையிலான அரசானது, நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளது. தேசபக்தியோடு இருக்கின்றது. எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்காகவும் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதனை பயனாளிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக அரசு பணியாற்றி வருகின்றது. ஆனால், வாக்கு வங்கியின் காரணமாக முன்பிருந்த ஆட்சியாளர்கள் சில பிரிவினருக்கு மட்டும் வாக்குறுதி அளித்தனர். பெரும்பாலானவர்களை புறக்கணித்து விட்டனர். இதுபோன்ற அணுகுமுறையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு புரியவைத்து பாஜ வெற்றி கண்டுள்ளது. பாகுபாடு மற்றும் ஊழலானது வாக்கு வங்கியின் பக்க விளைவுகளாகும். நலத்திட்டங்கள் முழுமையடையும் வகையில் ஒவ்வொரு பயனாளியையும் திட்டம் சென்றடைவதற்காக அரசு இயந்திரம் செயலாற்றி வருகின்றது. பாஜவை பொறுத்தவரை அரசியல் மற்றும் நாட்டின் நலனுக்கான கொள்கைகள் என தனித்தனியாக இருக்க முடியாது. ‘அனைவரின் ஒத்துழைப்பு; அனைவரின் வளர்ச்சி’ என்ற முழக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜ அரசுகள் எந்தவித பாகுபாடும், பாரபட்சமும் இன்றி ஒவ்வொரு பயனாளிக்கும் நலத்திட்டங்களை எடுத்து செல்வதற்காக உழைக்கின்றன. இந்தியா தனது தேசத்தின் நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.