அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பில் தொடர் கவனம் செலுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை.!

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பில் தொடர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுத்து அதன் கட்டடம் தரத்துடன் புதுப்பொலிவுடன் இருக்கவும், பள்ளி வளாகம் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கவும் உடனடி நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியில், பாதுகாப்பில், வளர்ச்சியில் தொடர் கவனம் செலுத்த வேண்டும்  

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளின் மீது முக்கிய கவனம் செலுத்தி செயல்பட்டால் தான் அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் பயன் தரும்.  

நடப்பாண்டிற்கான கல்வி ஆண்டில் மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்பக் கல்வி பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்து அரசுப்பள்ளிகளிலும் வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பாக உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.  

மழை, வெயில் என எக்காலத்திலும் மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பாதித்துவிடாமல் இருக்கும் வகையில் பள்ளிகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.  

குறிப்பாக பள்ளிக்கட்டடம், ஆய்வகம், விளையாடுமிடம், கழிப்பிட வசதி, உள் வளாகம், வெளிப்புறப் பகுதி என பள்ளியையும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியையும் முறையாகப் பார்வையிட வேண்டும். பள்ளிகளில் வகுப்பறை உள்பட எவை பழுதடைந்திருந்தாலும் அவற்றை முறையாக சரிசெய்ய வேண்டும்.  

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உள்ளே நுழைவது முதல் பள்ளி முடிந்து திரும்பும் வரை அவர்களை கண்காணித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதற்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அன்றாடம் அவசியம் தேவை. மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்க நெறிகளையும், பாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

கொரோனா காலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் கற்றலில் தடை ஏற்பட்டது தவிர்க்க இயலாதது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் இனிமேல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தடை ஏற்படாத வகையில் கல்வி தொடர நடவடிக்கை தேவை.  

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் தான் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.  

அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதையும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்.  

எனவே தமிழக அரசு, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, பராமரித்து, கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்களின் வருங்கால உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும், நல்வாழ்வுக்கும் உதவிடும் வகையில் முயற்சியில் ஈடுபட்டு தமிழ்நாட்டினை வளமானப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.