சென்னை: “உரிமைகளுக்காக போராடுபவர்களையும் பழிவாங்குவதற்கான அருவருக்கத்தக்க ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படக் கூடாது. பிரேம்குமார் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் நுழைந்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில், அவர் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றத்தை அவர் எப்படி செய்திருக்க முடியும்?” என்று பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் பாமக நிறுவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு பல்கலைக்கழகம் அதன் தகுதியிலிருந்து கீழிறங்கி பழிவாங்கும் கூடமாக மாறுவதும், அதற்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆயுதங்களை பயன்படுத்துவதும் உயர்கல்வியின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம்குமார், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். ஆசிரியர் சங்க நிர்வாகி என்ற முறையில், அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அவர் போராடி வருவதாக கூறப்படுகிறது. அதை சகித்துக் கொள்ள முடியாத பல்கலைக்கழக நிர்வாகம், அவர் பல்கலைக்கழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அதற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியது. அதற்கு பிரேம்குமார் உடனடியாக விளக்கம் அளித்த நிலையில், அதை முறையாகக் கூட ஆய்வு செய்யாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஆணையிட்டார்.
பணியிடை நீக்கத்தை எதிர்த்து பிரேம்குமார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விரைவில் ஆணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பாலியல் சீண்டல்களும், அத்துமீறல்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக போராடி வரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். அதே நேரத்தில் பிடிக்காதவர்களையும், உரிமைகளுக்காக போராடுபவர்களையும் பழிவாங்குவதற்கான அருவருக்கத்தக்க ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படக் கூடாது. பிரேம்குமார் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் நுழைந்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில், அவர் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றத்தை அவர் எப்படி செய்திருக்க முடியும்?
பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டாலும் கூட அவர் மீண்டும் பணியில் சேர்ந்து விடக்கூடாது என்று பல்கலைக்கழகம் நினைப்பதுதான் இந்த அநீதியான நடவடிக்கையின் பின்னணி காரணமாகும். பழிவாங்கப்படும் உதவிப் பேராசிரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழ்நாட்டின் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தரையும், பொறுப்புப் பதிவாளரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், பல்கலைக்கழக்கழக மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அடுத்தக்கட்டமாக மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன், பல்கலைக்கழக சிக்கல்கள் குறித்து மாணவர்கள் எந்த ஊடகங்களிடமும் தெரிவிக்கக்கூடாது என்று பல்கலைக்கழக சாசன விதிகளில் இல்லாத ஒரு பிரிவின்படி பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மாணவர்களிடம் கையெழுத்து பெறும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உறைவிடப் பள்ளிகளில் கூட இல்லாத அடக்குமுறைகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டவிழ்க்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் மாற்றத்தின் விளைநிலங்கள். எது சரி, எது தவறு? என்று பகுத்துப் பார்க்கும் திறன் மாணவர்களுக்கு உண்டு. உரிமைகளுக்காக போராடும் உரிமையும், சக்தியும் மாணவர்களுக்கு உண்டு. அதன்படி தமிழகத்தில் மாணவர்களால் தொடங்கப்பட்ட உரிமைப் போராட்டங்கள் தான் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தில் அநீதிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முடக்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் கொடிய சர்வாதிகார நாடுகளில் கூட மாணவர்களின் போராடும் உரிமை மறுக்கப்பட்டதில்லை; போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டது கிடையாது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அவசரமாக செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர், நூலகர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி அடிப்படையில் முழுநேர அதிகாரிகளை நியமிக்காமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு அதிகாரிகள் தான் தொடர்கின்றனர்; பல்கலைக்கழகத்தில் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு ஊதியம் தருவதற்கு நிதி இல்லை; வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்படவில்லை; சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஆராய்ச்சியும் இல்லை; குறைந்த எண்ணிக்கையிலான காப்புரிமைகள் கூட பெறப்படவில்லை. இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்தி பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நிர்வாகம், உரிமைக்காக போராடுபவர்களை பழிவாங்குவதில் நேரத்தையும், திறனையும் வீணடிக்க வேண்டாம்.
பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 4 பணியாளர்கள் கடந்த மாதம் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தை உயர் நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்குவதை விடுத்து ஆக்கபூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடப்பவற்றை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விதிமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.