அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் திடீரென ஏற்பட்ட பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், நடைபாதையில் புஷ்வாக்கிங் செய்து கொண்டு இருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் ஒன்பது வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50 வயதுடைய பெண் மற்றும் 14 வயதுடைய சிறுவன் என இருவர் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.
அதேநேரத்தில் 15 வயது சிறுமி இந்த விபத்தில் அதிர்ச்சி அடைந்து தற்போது மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு விடுமுறைக்காக வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த இந்த 5 நபர்கள் கொண்ட குடும்பம், திங்கள்கிழமை பிற்பகல் ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள வென்ட்வொர்த் நீர்வீழ்ச்சியின் நடைபாதையில் புஷ்வாக்கிங் செய்து கொண்டிருந்தபோது பாறைகள் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 9 வயது மகனின் உடல்களை செய்வாய்க்கிழமை(நேற்று) நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்டுள்ளனர்.
photo: Reuters
இந்த விபத்து குறித்து நியூ சவுத் வேல்ஸ் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) வெளியிட்ட அறிக்கையில், தற்போது விபத்து நடந்துள்ள நடைபாதையை சிலநாட்களுக்கு முன்பு தான் ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக, மாநிலத்தைச் சுற்றி எப்போதாவது நிகழக்கூடிய பாறை சரிவுகள் போன்ற அனைத்து இயற்கை அபாயங்களையும் கணித்து அகற்றுவது சாத்தியமில்லை” என நியூ சவுத் வேல்ஸ் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.