மும்பை: பிரிட்டனை உலுக்கி வரும் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கரோனா முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா கடந்த 2 ஆண்டுகளாக பல அலைகளைாக பரவியது. அண்மையில் கரோனா உருமாறிய ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவிலும் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடங்கி அச்சுறுத்தியது.
இது கரோனா பரவல் 3-வது அலையாக தொடங்கியது. கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து வந்தது. இதனை அடுத்து உலகின் பல நாடுகளும் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தின. நாடுகளுக்கு இடையேயான விமான சேவையும் மீண்டும் தொடங்கின. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து மார்ச் இறுதியில் பெருமளவு குறைந்தது.
இந்தநிலையில் ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கரோனா திரிபு கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் தொடர்ந்து பலருக்கும் இந்த பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும்.
உலக சுகாதார நிறுவனம் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருந்தது.
இப்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கோவிட்-19 இன் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. எக்ஸ் இ தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கோவிட்-19 வகையாக இருக்கும் என தெரிகிறது.
மும்பையில் முதல் தொற்று
இதனிடையே இந்தியாவின் முதல் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் இன்று பதிவாகியுள்ளது. மும்பை மாநகராட்சி தகவலின்படி கப்பா மாறுபாட்டின் கரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வைரஸ் திரிபு தொற்று கொண்ட நோயாளிகளுக்கு இதுவரை கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை.
மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 230 மும்பை கரோனா தொற்றாளர்களில் 228 பேருக்கு ஒமைக்ரான், ஒருவருக்கு கப்பா, ஒருவருக்கு எக்ஸ்இ திரிபு வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்த 230 கரோனா நோயாளிகளில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலில் உள்ளனர். இருப்பினும் அவர்களில் யாருக்கும் ஆக்ஸிஜன் அல்லது தீவிர சிகிச்சை தேவையில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் ஒன்பது பேர் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆவர்.