வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவியையும் அவர் பாராட்டியுள்ளார்.
கர்நாடகாவில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தின்போது அங்குள்ள தனியார் கல்லூரியில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது, சில மாணவர்கள் சூழ்ந்து ‛ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். இதையடுத்து அந்த மாணவி பதிலுக்கு, ‛அல்லாஹூ அக்பர்’ என கோஷமிட்டார். இந்த நிகழ்வு குறித்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மாணவி முஸ்கானை பாராட்டியுள்ளார்.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மறைவுக்கு பிறகு தலைவராக பொறுப்பேற்ற அய்மன் அல் ஜவாஹிரி, அந்த அமைப்பின் ஷபாப் ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில், ‛ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும்’ என வலியுறுத்தினார். மேலும், ‛அல்லாஹூ அக்பர்’ என கோஷமிட்ட மாணவி முஸ்கானையும் அவர் பாராட்டினார். ‛இந்தியாவின் உன்னத பெண்’ என எழுதப்பட்ட ஒரு போஸ்டருடன் அவர் கவிதை நடையில் பாராட்டுகளை தெரிவித்தார். ‛இந்த பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்து அவரது துணிவு குறித்து அறிந்து உருகினேன். இதனால் தான் கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன்’ என தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Advertisement