டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 7.5 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளது. அதன்படி, தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இது அடுத்த ஆண்டு (2023) முதல் காலாண்டில் அது 7.4 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 2023-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் அது 8 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், தற்போது 4 சதவீதமாக உள்ளது என்றும், அது வரும் நாட்களில் 4.5 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு பிறகு தற்போது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளதுடன், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளை கொண்ட தெற்காசியாவில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும் என்றும் கணித்துள்ளது.