சென்னை:
கடந்த 2017-ம் ஆண்டு முன்னான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில் டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
தினகரன் ரூ.2 கோடியை சுகேஷிடம் கொடுத்தபோது சென்னை வழக்கறிஞர் கோபிநாத் உடனிருந்ததாக தெரிகிறது. இவர் சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் பெற முயன்ற வழக்கில் கோபிநாத்தின் சீனியர் வழக்கறிஞர் ராமாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத் துறை குற்றவாளியாக சேர்த்துள்ளது. அவரது வீட்டிலும் கோபிநாத்தின் வீட்டிலும் அமலாக்கத் துறை 2017-ம் ஆண்டு சோதனை நடத்தியிருந்தது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கோபிநாத் என்பவர் நாளை டெல்லியில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனால் நேற்று முதலே கோபிநாத் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. நேற்றிரவு தூங்கச் செல்வதாகக்கூறி வீட்டின் எதிரே உள்ள குடிசைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு கோபிநாத்தின் தங்கை சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. இவரது உடலை மீட்ட திருவேற்காடு காவல் துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.