கொழும்பு: இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கை உலகம் முழுவதையும் தற்போது திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என சொல்லப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும்.
உலக நாடுகளை வளைக்கும் பிரமாண்ட திட்டம்
அதாவது துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சரக்கு முனையங்கள், போன்றவற்றை சாலை மார்க்கமாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் இணைப்பதே இந்த திட்டம். இதன் மூலம் எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படும். நாடுகளை சாலை வழி மூலம் இணைப்பதால் சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்துக்கு வழி ஏற்படும் என சொல்லப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு என இந்த திட்டம் பொதுப் பெயரில் சொல்லப்பட்டாலும் 3 இலக்குகளுடன் சீனா இதனை செயல்படுத்துகிறது.
சாலைகள் மூலம் ஆசியாவில் உள்ள முக்கால்வாசி நாடுகளை சீனாவுடன் இணைப்பதற்காக சில்க் ரோட் எக்கனாமிக் பெல்ட் (Silk Road Economic Belt) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உலக நாடுகளை சாலை வழியாக இணைப்பது மட்டுமின்றி அதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவும் முடியும் என சீனா நம்புகிறது.
கிழக்கு ஆசியாவில் இருந்து மேற்காசியா வழியாக ஆப்ரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளையும் சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் மேரிடைம் சில்க் ரோடு (Maritime Silk Road) திட்டம் இரண்டாவதாக செயல்படுத்தப்படுகிறது. அடுத்ததாக ரஷ்யாவுடன் இணைந்து சீனா மேற்கொள்ளும் ஐஸ் சில்க் ரோடு (Ice Silk Road) திட்டம். இதன்படி ரஷ்யா வழியாக ஆர்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளையும் இணைக்க முடியும்.
பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்துவதில் சீனாவுக்கு என தனிப்பட்ட உள்நோக்கமும் கிடையாது, உலகளாவிய வர்த்தக மேம்பாடு மற்றும் பொருளாதார சுழற்சி ஏற்படும்போது அதில் சீனாவும் பங்கேற்று பலன் பெறும் என ஜி ஜின்பிங் தெரிவித்தார். உலகின் நன்மைக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஜி ஜின்பிங் நம்ப வைத்தாலும் அதன் பின்னணியில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துவதே முக்கிய நோக்கம் என்ற அச்சம் அப்போதே எழுந்தது.
சீனாவின் ராஜதந்திரம்
முதலில் இந்த திட்டத்துக்கு ‘தி பெல்ட் அண்ட் ரோடு’ என்பதற்கு பதிலாக ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு ஸ்டேட்டஜி’ (One Belt One Road Strategy) என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இந்த பெயரே பெரும் சந்தேகத்தை ஏற்பத்தியது. சீனாவின் கட்டுப்பாட்டில் என்ற மறைமுக பொருளில் இருப்பதால் அதன் நேச நாடான ரஷ்யா கூட பல கேள்விகளை எழுப்பியது. இதனால் திட்டத்தின் பெயர் ‘தி பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ்’ என்று பின்னர் மாற்றப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளுக்கு கடன் அளிப்பதாக சீனா உறுதியளித்தது. எடுத்துக்காட்டாக இலங்கையில் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களை மேம்படுத்தவும், அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், மற்ற துறைமுகங்களுடன் வர்த்தக ரீதியாக இணைக்கவும் தேவைப்படும் பணத்தை சீன வங்கிகள் கடனாக வழங்கும்.
இதற்காக தங்க பத்திர உத்தரவாதத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் மூலம் பெரும் பணம் வழங்கப்படும். இதுபோலவே மேற்காசிய நாடுகளை இணைக்கும் நுழைவு வாயிலாக உள்ள பாகிஸ்தானுக்கும் பெலட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைத்து பெரும் தொகை கடனாக வழங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் வழியாக இந்த திட்டம் மேற்கு நோக்கியும், மலேசியா, ஹாங்காங், வட கொரியா என கிழக்கு நோக்கியும் விரிவடைந்தது. அதுபோலவே தென் கிழக்கில் இலங்கை வழியாக பயணத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தில் இணையும் நாடுகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பம், மனிதவளம் போன்றவற்றையும் சீனா தந்து வருகிறது. ஆனால் இதில் செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதுவும் வெளிப்படையானவை அல்ல. இதற்கான வட்டி விகிதங்களும் மிக அதிகம்.
கரோனாவால் திசைமாறிய பொருளாதாரம்
இந்த சூழலில் தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, இந்த திட்டத்தில் இணைந்த நாடுகளிலும் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியது. ஏற்கெனவே அதிகமான வட்டிக்கு கடன் பெற்று, கையில் இருந்த அந்நியச் செலாவணியையும் இதுபோன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிட்டுவிட்ட இலங்கை, பாகிஸ்தான், போன்ற நாடுகள் செய்வதறியாது திகைத்தன.
கரோனா காலத்தில் மருத்துவம், உணவு போன்ற அத்தியாவசிய தேவைக்கே பெரும் நிதி தேவைப்படும் நிலையில் உள்கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து செய்ய கூடுதல் கடன்கள் பெற வேண்டிய நிலைக்கு இந்த நாடுகள் தள்ளப்பட்டன. அதிலும் சுற்றுலா போன்ற வருவாயை நம்பியிருந்த இலங்கைக்கு கரோனா காலத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் கடன் மேல் கடன் வாங்க வேண்டிய கட்டாயமும், அதற்க வட்டி கட்ட வேண்டிய கட்டாயமும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள், அதிகாரிகள் இலங்கை, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு பல ஒப்பந்தங்களை செய்து முடிந்தனர்.
எதிர்க்கும் இந்தியா
பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை ஜி ஜின்பிங் அறிமுகம் செய்யும் போது 2020-க்குள் சுமார் 139.8 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்தார். இதில் 2020ல் மட்டும் சுமார் 22.5 பில்லியன் டாலரை சீனா முதலீடு செய்தது. இதன் பிறகு கரோனா காலத்தில் சீனாவும் உறுதியளித்த தொகையை இந்த திட்டத்துக்கு செலவிட முடியவில்லை.
ஆனால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே இந்தியாவும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேசமயம் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் திட்டத்தை ஆதரித்தன. சீன அரசு முன்வைத்துள்ள இந்த திட்டம் பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் ராஜதந்திர நடவடிக்கை என விமர்சனங்கள் எழுந்தன. சீனா இந்த முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ஏழை நாடுகளைத் தொடர்ந்து சீனா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது என உலக நாடுகள் சீனாவை குறைக்கூறி வருகின்றன.
ஏழை நாடுகளில் இந்த மாபெரும் கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தும் போது தத்தம் நாடுகளின் கடன் சுமை பெரியதாக உயரும். இதன் மூலம் சீனா பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என எச்சரிக்கை மணி அப்போதே அடிக்கப்பட்டது. இப்போது அது மீண்டும் உண்மையாகி வருகிறது.
சிக்கிய இலங்கை
சீனாவிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களால் சிக்கிக் கொண்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் தற்போது அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் சீனாவிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கியது தான் என சொல்லப்படுகிறது.
பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் முக்கியமான பகுதி இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம். பல நாடுகளை கடல் வழியில் இணைக்கும் மையப்புள்ளியான இந்த மிக முக்கியமான துறைமுகம் ஏறக்குறைய சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த துறைமுகம் சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (சி.எம்.போர்ட்)க்கு இலங்கை அரசால் 99 ஆண்டுகளுக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடப்பட்டது.
சீனா வணிக துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனம் (சி.எம்.போர்ட்) மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் (எஸ்.எல்.பி.ஏ) ஆகியவற்றுக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீன அரசு நிறுவனத்துக்கு 80 சதவீத பங்குகளையும், இலங்கை நிறுவனத்துக்கு 20 சதவீத பங்குகளையும் பிரித்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுவே தொடக்கத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இத்துடன் சீனாவின் ஹேன்டோங் ஹேவுவா நிறுவனம், டயர் தொழிற்சாலையை தொடங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு வரிச்சலுகை தருவதாகவும் இலங்கை ஒப்புக் கொண்டது. இதற்கு பிரதிபலனாக திட்டத்தை செயல்படுத்த தேவையான தொகை அதிக வட்டிக்கு கடனாக வழங்கப்பட்டது. பணம் வாங்கியாக வேண்டிய நெருக்கடியில் இருந்த இலங்கையும் ஒப்புக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக கொழும்பு துறைமுகம், வணிக வளாகங்கள் உட்பட பலவற்றிலும் சீன முதலீடு குவிந்தது. அதற்கு பிரதி பலனாக இலங்கை கடன் பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தானிலும் நெருக்கடி
இதுபோலவே பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தையும் வளைக்க சீனா அந்நாட்டுக்கு அதிகளவில் கடன் வழங்கியது. இப்போது அந்த துறைமுகத்தை வைத்து பெரிய கடன் பெற்ற பாகிஸ்தானும் விழி பிதுங்கி நிற்கிறது.
தெற்காசிய நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன் அளவு 4.7 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 40 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சீனாவால் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாமல் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் சீனாவிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனைப் பெற்று நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் ராஜபக்ச குடும்பத்தினர் கொண்டு வந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலையை புரிந்து கொண்டுள்ள நேபாளம் அண்மையில் சீனா பெருந்தொகையை கடனாக தர முன் வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்துள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வேண்டாம், மானியம் வேண்டுமானால் தாருங்கள் என கூறி விட்டது.
விமர்சனங்கள் பல எழுந்தாலும் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் பல நாடுகளில் அதிகப்படியான முதலீட்டில் பல கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தனது நாட்டின் வர்த்தகத்தையும் வருமானத்தையும் தொடர்ந்து அதிகரித்து பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது என்ற விமர்சனம் தற்போது உண்மையாகி வருகிறது.