உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா சபையில் கொண்டு வரப்படும் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மற்றும் ஓட்டெடுப்புகளில் இந்தியா நடுநிலை வகித்து வந்தது.
ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்கான முயற்சியினை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இதனால் அந்த நாட்டுடன் இணக்கமாக செல்லும் வகையில் ஐ.நா.சபையில் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு இந்தியா ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதை கடைபிடித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் தலைநகர் கிவ் புறநகர் பகுதியான புச்சா நகரை விட்டு ரஷியா படைகள் வெளியேறுவதற்கு முன்பு இன படுகொலை நடந்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியது.
புச்சா நகர சாலைகளில் நூற்றுக்கணக்கான பிணங்கள் சிதறி கிடந்தது. மேலும் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டதற்கான புகைப்படங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டனர். பலரது கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்கிற்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த செயலுக்கு இந்தியாவும் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.
இந்த படுகொலை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உக்ரைன் நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் எட்டவில்லை. புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை பற்றிய அறிக்கை ஆழ்ந்த கவலைகளை அளிக்கிறது. இந்த கொலைகளை சந்தேகத்திற்கு இடமின்றி நாங்கள் கண்டிக்கிறோம். இக் கொலைகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உக்ரைனில் உள்ள மோசமான மனிதாபிமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்நாட்டிற்கும், பக்கத்து நாடுகளுக்கும் மருந்து பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகப்படியான நிவாரண பொருட்களை வழங்க தயாராக இருக்கிறோம். இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாகவும் தூதரக அணுகுமுறை மூலமாவும் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.