புதுடில்லி:உணவு, ‘டெலிவரி’ சேவைகளை வழங்கும், ‘ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி’ நிறுவனங்களின் செயலிகள் முடங்கியதால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நம் நாட்டில், பல நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவைகளை வழங்கி வருகின்றன. கொரோனா பரவத் துவங்கியது முதல், இந்த சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இந்நிலையில், பிரதான உணவு டெலிவரி நிறுவனங்களான, ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கியின் செயலிகள் திடீரென முடங்கின.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் புகார் அளித்தனர்.இதற்கு விளக்கம் அளித்து, ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் தனித்தனியே அறிக்கை வெளியிட்டன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தங்கள் செயலிகள் முடங்கியதாகவும், அதை சரி செய்யும் பணிநடந்து வருவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த இரண்டு நிறுவனங்களும் நியாயமற்ற வணிக நடைமுறைகளை பின்பற்றுவதாக, சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 4ம் தேதி, இது குறித்து விசாரிக்க, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சி.சி.ஐ., எனப்படும், நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement