பெங்களூரு:கர்நாடகாவில், பெட்ரோல், டீசல், மின்சாரம், ஓட்டல் உணவு விலைகள் அதிகரித்துள்ள நிலையில், விரைவில், வாடகை கார்களின் கட்டணத்தையும் உயர்த்துவதற்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக, 10 சதவீதம் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமனிய மற்றும் நடுத்த வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
மேலும், சமையல் எண்ணெய் வகைகள், காய்கறிகள் உட்பட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உணவு பண்டங்களின் விலையும் உயர உள்ளது. ஏற்கனவே, ‘பாஸ்ட்புட்’ எனப்படும் துரித உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர் விலைஉயர்வு குறித்து பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூடினர். அப்போது ஏழு நாட்களுக்குள் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையில் 10 சதவீதம் உயர்த்துவதற்கு தீர்மானித்தனர்.
மின்சார கட்டணமும் 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.இதற்கிடையில், கர்நாடக தனியார் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் வாடகை கார் கட்டணத்தை குறைந்தபட்சம் 20 சதவீதம் உயர்த்தும்படி பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.கூட்டத்துக்கு பின், சங்க தலைவர் ராமகிருஷ்ண ஹொள்ளா கூறியதாவது:
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டுமே 10 ரூபாய் அதிகரித்துள்ளது. மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்துக்கு சென்றுள்ளது. எனவே வாடகை கார்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.வாடகை கார்களின் கட்டணத்தை உயர்த்தா விட்டால், டாக்சி தொழில் நடத்துவது கஷ்டம். எனவே தற்போதைக்கு 10 சதவீதம் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை இன்னமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், டாக்சி வாடகை மேலும் அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. உயர்த்தப்படும் வாடகை கட்டணம் இந்த வார இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையில் விலை அதிகரித்து வருவதால், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement