டெல்லி : உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை மிகக்குறைவாகவே உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. இதில், 5 மாநில தேர்தல் முடிந்தபின் கடந்த 22ம் தேதியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 16 நாட்களில் பெட்ரோல் ரூ.9.56க்கும் டீசல் ரூ.9.86க்கு ம் விற்பனையாகிறது. இவ்விலையேற்றத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் மக்களவையில் எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்விக்கு ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதிலில், ‘ரஷ்யா- உக்ரைன் போரால் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்த போர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை மிகக்குறைவாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் 2021 மார்ச் 22க்கு இடையிலான காலத்தில் அமெரிக்கா 51% கனடா 52%, ஜெர்மனி 55% பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளன. இதே காலகட்டத்தில் பிரான்ஸ் 50%, ஸ்பெயின் 58% என பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.எனினும் இந்தியாவில் 5% மட்டுமே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது,’ இவ்வாறு தெரிவித்தார்.