உக்ரைன் விவகாரம் உட்பட எந்தச் சிக்கலுக்கும் போர் தீர்வாகாது என்றும், பேச்சு வார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், அமைதி நிலவச் செய்யவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவுமான நிலைப்பாட்டைத் தான் இந்தியா தேர்வு செய்யும் எனத் தெரிவித்தார்.
போரில் அப்பாவி உயிர்களைக் கொல்வதால் எந்தத் தீர்வும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார். உக்ரைனின் புச்சாவில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாவும், இது குறித்த சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உக்ரைன் போரால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு நலனைக் காக்க எத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.