கடப்பா: ஒருங்கிணைந்த ஆந்திராவில் ராம நவமியை முன்னிட்டு, சீதா-ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் பத்ராசலம் ராமர் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், தனி தெலங்கானா மாநிலம் உருவானபோது, பத்ராசலம் தெலங்கானாவுக்கு சென்றுவிட்டது. ஆதலால், ஆந்திராவுக்கென கடப்பா மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் தேர்வு செய்யப்பட்டது. இக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இதனை பராமரித்து வருகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ராம நவமி உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ராம நவமி பிரம்மோற்சவ விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 9-ம் அங்குராற்பன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்வாக15-ம் தேதி இரவு சீதா ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்.