அபுதாபி,
ஐக்கிய அரபு அமீரகத்தில் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக இஸ்ரேலிய பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 43 வயதான பிடா கிவான் என்று இஸ்ரேலிய ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த பெண், தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னதாக வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபாவில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் கிவான், ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்கு வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொக்கெய்ன் போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். கிவான் அந்த போதைப்பொருள் தன்னுடையது அல்ல என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
துபாயில் உள்ள சட்ட அதிகாரிகள் போதைப்பொருள் வழக்குகளை தீவிரமாக நடத்துகிறார்கள் என்பதை இஸ்ரேலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.