புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 528 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடிகள் குடியிருப்பு கட்டுவதாக கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் விடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. இந்த நிலையில், இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுவதற்கு கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே, ஒப்பந்ததாரர் தரப்பு ஜேசிபி, லாரி இயந்திரங்களுடன் வந்து கட்டடம் கட்டும் பணியைத் தொடங்க, பொதுமக்கள், லாரி மற்றும் வாகனங்களைச் சிறைப்பிடித்தும், பள்ளங்களில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில், போலீஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள், கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தான், கிராம மக்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தடை ஏதும் இல்லாத நிலையில், தற்போது அடுக்குமாடிக் கட்டடத்தை கட்ட முனைப்பு காட்டும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினர், போலீஸார் பாதுகாப்போடு மீண்டும் தற்போது இந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர். அதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்து மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.
பல கட்டங்களாகப் போராடி இந்தத் திட்டத்தை செயல்பட விடாமல் தடுக்க முயலும் கிராம மக்கள் முதற்கட்ட போராட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி, அரசுப் பள்ளியில் படிக்கும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுபற்றி கிராம மக்களிடம் கேட்டபோது, “கடந்த வருடமே இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினோம். மக்களின் கருத்துகளைக் கேட்காமல், நிச்சயம் நிறைவேற்ற மாட்டோம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு, ஒரு வருடம் கழித்து தற்போது மீண்டும் குறுக்கு வழியில் செயல்படுத்த முயல்கின்றனர்.
இங்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வந்தால், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் எங்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். எங்க பகுதியிலேயே மேல் நிலைப்பள்ளி, மருத்துவமனை எல்லாம் இல்லை. இவை கட்டுவதற்கும், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இந்த இடத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒருபோதும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டக்கூடாது. அதற்கு விடவும் மாட்டோம். இந்த திட்டத்தைக் கைவிடும் வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றனர்.