திருமலை : ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி, வருகிற 15-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கூடுதல் செயலதிகாரி தர்மா ரெட்டி, அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தார். அப்போது, தர்மா ரெட்டி பேசுகையில், ‘‘கொரோனா நோய்த் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீதா-ராமர் திருக்கல்யாணம் அரசு விழாவாக நடத்தப்படுவதால், கடப்பா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெரிய பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கோயில், தங்கும் விடுதிகள், விஐபி ரெஸ்ட் ஹவுஸ், கல்யாண மேடை போன்றவற்று குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கல்யாண உற்சவத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரங்களை சமர்பிக்க உள்ளார்’’ என்று தெரிவித்தார். இந்த ஆய்வில் கடப்பா மாவட்ட கலெக்டர் விஜயரம ராஜு, இணை கலெக்டர் சாய்காந்த் வர்மா, உதவி கலெக்டர் பாபு, கூடுதல் எஸ்.பி. மகேஷ்குமார், முதன்மை பொறியாளர் நாகேஸ்வரராவ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.