எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற அலுவல்கள் இன்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்..
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை தொடர்பில் விசேட விவாதம் இன்றும் இடம்பெற்றது. இந்த விவாதம் நாளையும் நடைபெறவுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்தார்.
இதன் பின்னர் எதிர்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லஸ்மன் கிரியெல்ல முன்வைத்த கேள்விக்கு ஆளும் தரப்பு கொறாடாவும் அமைச்சருமான ன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹெரத் உரையாற்றினார்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனநாயக ரீதியில் அரசாங்கம் செயற்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன விவாதத்தின் போது தெரிவித்தார்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, பொறுப்புடன் செயற்படுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன எதிர்க்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டில் தற்போது நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து பாராளுமன்றம் விடுபட முடியாது என்று விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
2016ம் ஆண்டிலேயே அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்தது. இதனால் கடன் தவணை மற்றும் வட்டி செலுத்தும் விடயம் சிக்கலுக்குரியதாக மாறியது. அத்துடன் கொவிட் பெருந்தொற்றின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிவகைகளும் இதனால் தடைப்பட்டதாக பந்துல குணவர்த்தன கூறினார்.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பிரிந்து செயற்படுவதன் மூலம் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இணைந்து செயற்படுவதன் மூலம் பிரச்சினையில் இருந்து மீண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.
நாட்டிற்கு நேயமிக்க தலைவர் ஆட்சிக்கு வந்த சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சிலர் வன்முறைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன கூறினார்.
கடந்த காலங்களில் இளைஞர் யுவதிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கிய சில கட்சிகள் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்ஹ தெரிவித்தார். குரோதம் மற்றும் குறுகிய மனப்பாங்குடன் செயற்படாத எந்தவொரு தரப்பிற்கும் தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்பதற்கு எவரும் முன்வராதவிடத்து ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். பொருளாதார நிபுணரான ஹர்ஷ டி சில்வாவினால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனது பாராளுமன்ற சம்பளத்தை ஒருவருட காலத்திற்கு பெறப்போவதில்லை; என்றும், பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு அருந்தப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திற்குள்ளிருந்தே தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கையின் போது இரண்டு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
சுபையில் இடம்பெற்ற உரையின் போது ஏற்பட்ட பதட்ட நிலைமையே இதற்கு காரணமாகும்.