கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயசாலைக்கு புதிய கட்டுப்பாடுகள்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய சாலையில் `12 சக்கர வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடைகொண்ட கனரக வாகனங்களுக்கும் இனி எப்போதும் அனுமதி இல்லை’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பாஸ் வாங்கிய உள்ளூர் வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அமல்படுத்திய `இரவு நேர போக்குவரத்திற்கு தடை’ உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சில மக்கள் போராடடத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தரப்பில், `இந்தத் தடை உத்தரவால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. – பி.எல்.சுந்தரமும், ஈரோட்டை சேர்ந்த கண்ணையன் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
image
இதற்கிடையில் `சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டன.
அப்போது தமிழக அரசு தரப்பில், `பால் மற்றும் மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம்’ எனவும், `உள்ளூர் மலை கிராம மக்கள் எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல், உரிய ஆதாரங்களை சரிபார்த்து சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம். அழுகும் பொருட்களான காய், பழங்கள், பூக்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் இரவு நேரங்களில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம்’ என்றும் வாதிடப்பட்டது.
image
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், `12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி இல்லை. அதற்கு கீழ் உள்ள வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்கள் காலை 6 மணிக்கு மேலிருந்து மாலை 6 மணி வரை என பகல் நேரத்தில் மட்டுமே அனுமதிப்பட வேண்டும்; இரவில் அனுமதி இல்லை. மேலும் அந்த சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படுகிறது. 27 கி.மீ. தூரமுள்ள சாலையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
image
வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து, அதை சாலை மற்றும் சிசிடிவி பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம். 27 கிமீ சாலையில் உள்ள கிராம மக்களின் வாகனங்களை புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி வாகனங்களை அனுமதிக்கலாம். வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு ஒரு போதும் சிரமங்கள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிய அனுமதியுடன் சென்று வரலாம் என கூறியுள்ள நீதிபதிகள், மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் உரிய அனுமதியுடன் செல்லலாம்’ என உத்தரவிட்டு, வழக்குகளை முடித்துவைத்தனர்.
சமீபத்திய செய்தி: முடங்கியது ஸ்விக்கி – சொமாட்டோ செயலிகள்… சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள் புகார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.