7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு… 10 ம் வகுப்பு தகுதிக்கான 22 காலி பணியிடங்களுக்கு குவிந்த 5 ஆயிரம் பேர்… குறைந்த கல்வி தகுதிக்கான பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும் கூட போட்டிபோட வேலையின்மையே காரணம் என வருத்தம் தெரிவிக்கும் மக்கள் – இதுகுறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்தல் நேற்று 06.04.2022 முதல் வரும் 11.04.2022 முதல் மாவட்டம் தோறும் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 22 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிக்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நேர்காணல் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நேற்று தொடங்கியது. வரும் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததால் தினமும் 800 பேருக்கு நேர்காணல் நடத்தும் வகையில் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.
கால்நடை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டுதல், மாடு பிடித்து கட்டுதல், மாடுகளை கையாளும் முறை உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. அப்போது, பெண்கள் சிலர் மாடுகளை கையாளும்போது சற்றே பயத்துடன் கையாண்டனர். மேலும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்டப்பட்டது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்ற கல்வித் தகுதிக்கான 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணபித்து நேர்காணலில் கலந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிக்காக வருவோர் ஒருபுறம் இருந்தாலும் உயர்கல்வி படித்தும் வேலையின்மை காரணமாக இம்மாதியான தேர்வுக்குத் தொடர்ந்து விண்ணப்பித்து முயற்சி வருவதாக நேர்காணலில் பங்கேற்றோர் கூறினர்.
மேலும் இதுகுறித்து இணை இயக்குநர் டாக்டர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், இது கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவுவதற்ககான கால்நடை பராமரிப்பு பணிக்கான நேர்க்காணல் ஆகும். இது கால்நடை தொடபான பணி என்பதால் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளை எப்படி கையாள்வது என்ற அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளை கையாள முடியும்.
இதற்க்கு 20 மதிப்பெண்கள் ஒதுக்கியிருக்கிறோம். அதேபோல் சைக்கில் ஓட்ட தெரிந்திருக்கிறதா என்றும் சோதிக்கிறோம். அலுவலக பணிகளை மேற்கொள்ள அது தேவை. இதற்கு 20 மதிப்பெண். மேலும் ஆட்சியர் யார்? அவரது அலுவலகம் எங்குள்ளது? வங்கி எங்குள்ளது? உள்ளூர் பேருந்து பயண விவரம் போன்ற அடிப்படை கேள்விகளை கேட்டு வருகிறோம். இதற்கு 10 மதிப்பெண் என மொத்தம் 50 மதிப்பெண்கள் வைத்துள்ளோம்.
இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதெல்லாம் இருந்தால்தான் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியாற்ற தகுதி பெறுவார் என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM