BJP members wear saffron cap and creates new identity: பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும்போது, பாஜகவினர் அனைவரும் காவி நிற தொப்பி அணிய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்திலும் சென்னை கமலாலயத்தில் பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதில் பாஜக இணை மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தமிழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் காவி நிற தொப்பி அணிந்து கலந்துக் கொண்டனர்.
முன்னதாக, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் தேர்தலின்போது, சிவப்பு நிற தொப்பிகளை அணிந்து தங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தினர். தற்போது குஜராத் தேர்தலில், பாஜகவினர் பிரச்சாரங்களின் போது காவி நிற தொப்பி அணிய முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே சமீபத்திய குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி காவி தொப்பி அணிந்திருந்தார். இதனையடுத்து பாஜகவினர் அனைவரும் காவி நிற தொப்பி அணிய முடிவு செய்துள்ளனர். அதாவது பாஜக தேசிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் காவிநிற தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நாடு முழுவதும் பா.ஜனதா நிகழ்ச்சிகளின் போது தலைவர்கள், தொண்டர்கள் அணிவதற்காக காவி நிற தொப்பி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஒரேவடிவில் சிறப்பு வகை காவி தொப்பி தயாரிக்கப்பட்டது. கட்சியினர் சின்னமான தாமரை இடம்பெற்றுள்ள இந்த தொப்பி தொண்டர்களின் அடையாளமாக மாறியுள்ளது.
இதையும் படியுங்கள்: பாரதிய ஜனதா கட்சி 42வது ஆண்டு விழா.. பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகை குஷ்பு!
இந்த நிலையில், கட்சியின் நிறுவன நாளான இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கலந்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள் காவி தொப்பி அணிந்திருந்தனர். பாஜக நிறுவன நாளையொட்டி, சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக தாமரை சின்னத்துடன் கூடிய காவிநிற தொப்பி வழங்கப்பட்டது. இந்த தொப்பிகளை அணிந்தபடி பாஜக தொண்டர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு காவிநிற தொப்பி அணிந்து கொடியேற்றினார். அவருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களும் காவிநிற தொப்பியை அணிந்திருந்தனர்.
சுதந்திர போராட்ட காலங்களில் காங்கிரஸ் தொண்டர்களிடையே வெள்ளை நிற தொப்பி அணிவது வழக்கமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகும் ஜவஹர்லால்நேரு உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந்தனர். பிறகு இந்த பழக்கம் காங்கிரஸ் கட்சியினரிடையே குறைந்துவிட்டது.
ஆனால் பாஜக தற்பொது காவி தொப்பி அணியும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளது. பாஜகவை அதன் எதிர்கட்சிகள் காவி கட்சி என்றே கூறி வரும் நிலையில், பாஜகவும் அதனை விரும்பி ஏற்றுக் கொள்கிறது. அந்த வகையில் தான் தற்போது காவி தொப்பி அணிவதை தங்களின் அடையாளமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.