கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானத்ந் ராய் பதிலளித்துள்ளார்.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், “கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்தும், இந்திய நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா?” என்று ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “2017 முதல் 2022 மார்ச் 30 வரை 22 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் (மாநில பட்டியல்) கீழ் வருகிறது. அதாவது, ஒரு மாநில கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தொடர்பான வழக்குகளை பதிவு செய்வதற்கான முதன்மை பொறுப்பு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் உள்ளன. இருப்பினும் தேசிய குற்றப்பதிவு பணியகத்தில் உள்ள தரவுகளின்படி 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய எண்ணிக்கையை விடக் குறைந்துள்ளது” என்றார்.