திருமலை: கோயில் ஜன்னல் கம்பிகளை உடைத்து, உள்ளே சென்ற கொள்ளையன் நகை, பணத்தை திருடி கொண்டு வெளியே வரமுடியாமல் 6 மணி நேரம் தவித்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜதுபுடி கிராமத்தில் ஜே.மி.எல்லம்மா கோயில் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். நேற்று காலை கோயில் வழியாக சிலர் நடந்து சென்றனர். அப்போது கோயிலில் இருந்து, ஒருவரது சத்தம் கேட்டது. உடனே சத்தம் வந்த பக்கம் சென்றனர். கோயில் சுவற்றில் ஓட்டை போடப்பட்டிருந்தது. அதில் சிக்கி கொண்டு மர்ம நபர் வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். இவர் ஏன் உள்ளே சென்றார் என பார்த்தபோது நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் நீண்ட நேரமாக போராடி வெளியே இழுத்தனர்.இதுகுறித்து காஞ்சிலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, மர்ம நபரிடம் விசாரித்தனர். அவர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அப்பாராவ் (25) என்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், கோயிலில் நகைகளை திருட திட்டமிட்ட அப்பாராவ், நேற்று முன்தினம் இரவு அங்கு வந்துள்ளார். கோயில் ஜன்னல் கம்பிகளை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். உண்டியலில் இருந்த காணிக்கை மற்றும் சுவாமியின் தங்கம், வெள்ளி நகைகளை வாரி சுருட்டி கொண்டு, வந்த வழியே செல்ல முயன்றார். ஆனால் வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். நீண்ட நேரம் சத்தம் போட்டும் யாருக்கும் கேட்காத நிலையில் மறுநாள் காலை வந்த அப்பகுதி மக்களிடம் கெஞ்சியுள்ளார். இதையடுத்து சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் மீட்டுள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பாராவை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகை, பணத்தை மீட்டனர். இதற்கிடையே அப்பாராவ் சிக்கி கொண்ட காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.