புதுடெல்லி: குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு 15 ஆண்டாகியும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பொதுவான குற்றமாக குடும்ப வன்முறைகள் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவும், சட்ட உதவி பெறவும், அவர்களுக்கான பாதுகாப்பு இடங்கள் அமைக்கவும் தேவையான உள்கட்டமைப்பை செய்து தர உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த மாதிரியான சட்டங்கள் மற்றும் திட்டங்களை கொண்டு வரும் போது, அதனால் ஏற்படும் நிதி தாக்கத்தை மனதில் கொள்ள வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்துகிறோம். இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டுமானால், கல்வி உரிமைச் சட்டத்தை கூறலாம். சட்டத்தை கொண்டு வந்து, கல்வியை உரிமை ஆக்கினீர்கள். ஆனால் பள்ளிகள் எங்கே? ஒருவேளை மாநில அரசுகள், மாநகராட்சிகள் பள்ளிகளை அமைத்தாலும், அங்கு பாடம் கற்றுத்தர ஆசிரியர்களை எங்கிருந்து பெறுவார்கள்? எனவே எல்லாவற்றையும் முழுமையாக பார்க்க வேண்டும். நிதி தாக்கத்தையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் என்பது ஒரு சிறப்பு சட்டமாகும். இதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை முழுமையாக மாநில அரசுகளிடம் இருந்து ஒன்றிய அரசுதான் கேட்டறிய வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.