`சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழுந்துவிடும்' அமெரிக்காவை மிரட்டும் ரஷ்யா!

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடை உட்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யர்கள் யாரும் இப்போது அமெரிக்கா போக முடியாது; இதேபோல அமெரிக்கர்கள் ரஷ்யா போக முடியாது. ஆனால், இப்போதும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கமாக இணைந்து ஒரே ஒரு துறையில் பணியாற்றி வருகின்றன. அது, விண்வெளித் துறை.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியுள்ளன. 23 ஆண்டுகளுக்கும் மேலாக இது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவை மிரட்டும் ரஷ்யா

பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இங்கு சென்று மாதக்கணக்கில் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள். அதிகபட்சம் ஏழு பேர் தங்க முடிகிற இந்த விண்வெளி நிலையத்துக்கு அவ்வப்போது புதியவர்கள் போவார்கள்; ஏற்கெனவே அங்கிருக்கும் வீரர்கள் திரும்பி பூமிக்கு வருவார்கள். அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி ஓடங்களே இதற்குப் பயன்படுகின்றன. இதில் யாரும் எந்த பேதமும் பார்ப்பதில்லை. இப்போதும் இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ரஷ்யாவின் சோயூஸ் விண்வெளி ஓடத்தில் மூன்று பேர் இப்போது பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். இவர்களில் இருவர் ரஷ்ய விண்வெளி வீரர்கள். இன்னொருவர், அமெரிக்காவின் மார்க் வேண்டா ஹை. விண்வெளியில் தொடர்ச்சியாக 355 நாட்கள் தங்கியிருந்த அமெரிக்கர் என்ற பெருமையுடன் திரும்பியிருக்கிறார் வேண்டா ஹை. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மோஸ், பக்கத்தில் உள்ள கசகஸ்தான் நாட்டில் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தை வைத்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய விண்வெளி ஏவுதளம் இதுதான். சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பெரும்பாலான பயணங்கள் இங்கிருந்தே நிகழ்கின்றன.

இங்குதான் வந்து இறங்கினார் வேண்டா ஹை. பிறகு அவரை அமெரிக்கா அழைத்துச் சென்றார்கள். ”பூமியில்தான் மனிதர்களுக்குள் பிரச்னை. விண்வெளியில் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்” என்று இவர்களுக்கான வழியனுப்பு விழாவில் சொன்னார், ரஷ்ய வீரர் அன்டன் ஷாப்லெரோவ்.

ராஸ்காஸ்மோஸ் இயக்குநர் டிமிட்ரி ரகோசின்

”விண்வெளியில் நாங்கள் இணைந்தே வாழ்ந்தோம். ரஷ்யர்கள் எனக்கு நெருக்கமான நண்பர்களாக எப்போதும் இருப்பார்கள். எல்லா பிரச்னைகளும் தீர்ந்து உலகில் அமைதி திரும்ப வேண்டும்” என்கிறார் வேண்டா ஹை.

ஆனால், இந்த இணக்கம் நீண்ட காலம் நீடிக்காது போலிருக்கிறது. ”ரஷ்யா மீதான தடைகளை மேற்கத்திய நாடுகள் நீக்காவிட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாங்கள் தரும் ஒத்துழைப்பு நிறுத்தப்படும். விண்வெளித் துறையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இருக்கும் நல்லுறவு இந்தத் தடைகளால் பாதிக்கப்படும்” என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மோஸ் இயக்குநர் டிமிட்ரி ரகோசின் சொல்கிறார். ”ரஷ்யாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி எங்களை துயரத்திலும் பட்டினியிலும் தள்ள நினைக்கிறீர்கள். எங்களை மண்டியிட வைக்க நினைக்கும் உங்களுடன் நாங்கள் எப்படி இணக்கமாக இருக்க முடியும்?” என்று அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் கேட்கிறார் அவர்.

வேண்டா ஹை

ரஷ்யாவின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழந்து பூமியில் விழுந்துவிடும் என்று எச்சரிக்கிறார் டிமிட்ரி ரகோசின். ”எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் அதை யாராலும் காப்பாற்ற முடியாது. அது கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக சுற்றி பூமியில் வந்து விழுந்துவிடும். நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், சர்வதேச விண்வெளி நிலையம் ரஷ்ய நிலப்பரப்புக்கு மேலே பறக்கவில்லை. அதனால் எங்களுக்கு ஆபத்து இல்லை. அது அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோதான் விழும்” என்றும் திகில் கிளப்புகிறார் ரகோசின்.

மற்ற எல்லா விஷயங்களையும் அலட்சியப்படுத்தினாலும், இந்த ஒரு விஷயத்தில் ரஷ்யாவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அமெரிக்கா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.