நாகர்கோவில்:
நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). இவர் புன்னை நகர் மற்றும் நாகர்கோவில் கோர்ட் ரோடு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர் வெள்ளிச்சந்தை அருகே நிலம் வாங்குவதற்காக இரண்டு நபர்களிடம் ரூ.1½ கோடி பணம் கொடுத்தார். பணத்தை வாங்கிய பிறகு அவர்கள் நிலத்தை எழுதிக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக டி.எஸ்.பி. தங்கவேலு (55) விசாரணை நடத்தினார். அப்போது சிவகுரு குற்றாலம் கொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ரூ.10 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று டி.எஸ்.பி. தங்கவேலு கேட்டுள்ளார்.
இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் சிவகுரு குற்றாலத்திற்கு நிலத்தை எழுதி கொடுத்தனர். இதை அறிந்த டி.எஸ்.பி. தங்கவேலு சிவகுரு குற்றாலத்தை தொடர்புகொண்டு நான் பேசியதால்தான் நிலத்தை உடனடியாக எழுதிக் கொடுத்தார்கள். எனவே எனக்கு நீங்கள் ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.5 லட்சம் பணத்தை ரசாயன பவுடர் தடவி சிவகுரு குற்றாலத்திடம் கொடுத்து அனுப்பினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்த டி.எஸ்.பி. தங்கவேலிடம் தொழில் அதிபர் சிவகுரு குற்றாலம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், ரமா, சிவசங்கரி ஆகியோர் டி.எஸ்.பி. தங்கவேலுவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 3 மணிவரை நடந்தது. சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலிடம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ராமன்புதூர் சந்திப்பில் உள்ள டி.எஸ்.பி. தங்கவேலு தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை 7 மணி வரை நடந்தது. சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது.
அந்தப் பணம் குறித்து டி.எஸ்.பி. தங்கவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். அவர் பணத்தை தனது நண்பரிடம் வாங்கியதாக கூறினார். அந்த நண்பர் யார்? என்ற விவரங்களை போலீசார் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை.
12 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு டி.எஸ்.பி. தங்கவேலின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் கேட்டு வாங்குதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட தங்கவேலுவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தங்கவேல் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரே லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.