சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடியிருந்து வருகிறார். இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரின் சகோதரி, ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக மாணவியின் வீட்டுக்குச் சென்றனர். மாணவியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களையும் போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரின் வளர்ப்பு தந்தை ஷெரீப் (64), அவரின் மனைவி ஜமிலா (58), இவர்களின் மகன்கள் இம்தியாஸ் (34), இர்பான் (29) ஆகிய 4 பேரை போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஷெரீப்பின் மகனான அணிப் (26), போலீஸாரால் தேடிப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சிறுமி குழந்தையாக இருந்தபோது அவரின் தாய், தந்தை அடுத்தடுத்து இறந்து விட்டனர். அதனால் சிறுமியை வளர்க்க முடியாமல் அவரின் உறவினர்கள் சிரமப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் ஷெரீப் என்பவருக்கு மூன்று மகன்கள் இருந்ததால் அவர் சிறுமியை தத்தெடுக்க விரும்பினார்.
இதையடுத்து சிறுமியை ஷெரீப் அவரின் மனைவி ஜமீலா, தங்களின் வீட்டுக்கு அழைத்து வந்து மகள் போல வளர்த்தனர். இந்தத் தம்பதியினரின் மூன்று மகன்களும் சிறுமியை தங்கையாகவே கருதினர். மூன்று அண்ணன்களுக்கு ஒரு தங்கையாக வளர்ந்த சிறுமி, சந்தோஷமாக இருந்தார். பிரபலமான பள்ளியில் சிறுமியைப் படிக்கவும் வைத்தனர். இந்தச் சமயத்தில் சிறுமி பருவமடைந்தார். அதுவரை சிறுமியை மகளாக பார்த்த ஷெரீப்பின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை வளர்ப்புத்தாய் ஜமிலாவிடம் கூறி கதறி அழுதார். அதைக்கேட்ட அவரோ, நடந்தச் சம்பவத்தை வெளியில் யாரிடம் சொல்லாதே என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் சிறுமி, கர்ப்பமடைந்திருக்கிறார். அதனால் கருவை குடும்பத்தினர் கலைத்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஷெரீப்பால், சிறுமி பாதிக்கப்பட்ட தகவல் குடும்பத்தில் உள்ள இம்தியாஸ் (34), இர்பான் (29), அணிப் (26) ஆகியோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். வளர்ப்பு தந்தை, உடன்பிறவாத அண்ணன்களால் தினமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குடும்பத்தில் யாரும் உதவி செய்யவில்லை. இதையடுத்து சிறுமி, தனக்கு தெரிந்த சகோதரி ஒருவர் மூலம் இந்தச் சம்பவத்தை காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்தே நாங்கள் அணிப்பை தவிர மற்றவர்களை கைது செய்துள்ளோம். சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.