சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், வோளண்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண்துறை பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக இன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. மே 10ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின்கேள்விகளுக்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி தெரிவித்து வருகின்றனர்.
வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
அதுபோல ஏழை மக்களுக்கு இலவச பட்டாக்கள் வாங்கப்படுமா என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு, 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்
முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறும். விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குவார் நீர்வளத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், சொத்து வரி உயர்வு, வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.