மும்பை,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் – படிக்கல் ஜோடி நிதானமாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் 37 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் அதிரடி வீரர் ஹெட்மயர் களமிறங்கினார். பட்லர் – ஹெட்மயர் ஜோடி இறுதி நேரத்தில் வாணவேடிக்கை காட்ட ராஜஸ்தான் அணியின் ரன் கணக்கு மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டூ பிளேசிஸ் – அனுஜ் ராவத் நன்றாக விளையாடி வந்தனர். டூ பிளேசிஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து அனுஜ் ராவத் 26 ரன்களில் வெளியேற பின்னர் வந்த கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த டேவிட் வில்லி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற பெங்களூரு அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது ருத்தேர்போர்ட் 5 ரன்களில் வெளியேற பெங்களூரு அணி தங்கள் 5-வது விக்கெட்டை இழந்தது.
ஒரு முனையில் நிலைத்து நின்ற ஆடிய ஷபாஸ் அகமத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்தில் அவர் சிக்சர் பவுண்டரிகளாக விளாசினார். 12 பந்துகளில் 30 ரன்களை கடந்த அவர் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார்.
அவருடன் இணைந்து ஷபாஸ் அகமத் -வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றிக்கு மிக தூரத்தில் இருந்த பெங்களூரு அணி இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நெருங்கியது. 18-வது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசிய ஷபாஸ் அகமத் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் வெளியேறினார்.
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் உடன் ஹர்ஷல் பட்டேல் இணைந்தார்.
அந்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச தினேஷ் கார்த்திக் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரின் முதல் பந்திலே ஹர்ஷல் பட்டேல் சிக்சர் அடித்தார்.
இதனால் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.