புதுடெல்லி: மத்திய ரயில்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, அதிமுக எம்.பியான ரவீந்திரநாத் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ரயில் தொழிற்சாலைகளை அவசியம் என வலியுறுத்தி மனு அளித்தார்.
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தேனி மக்களவை தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘எனது தேனி மக்களவைத் தொகுதியில் ரயில்வே மேம்பாடு தொடர்பான முக்கியமான திட்டங்களை நீங்கள் கவனத்துடன் பரிசீலிக்கத் தேவையானவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
மதுரை- போடிநாயக்கனூர் அகலப்பாதை மாற்றும் திட்டத்தில், இதுவரை இயக்கப்பட்ட மதுரை-தேனி ரயில் பாதையில் முறையான திறப்பு விழா மற்றும் சேவைகள் விரைவில் தொடங்கப்படலாம்.
சி.ஆர்.எஸ். ஆய்வானது, 2022, மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைந்தது. தற்போது ரயில் பாதையானது, சேவை நடவடிக்கைகளுக்குத் தயாராக உள்ளது. பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் குறிப்பிட்ட ரயில் பாதையில் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பல ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டியது அவசியம்.
இது வணிக ரீதியாகவும் திட்டத்தைச் சாத்தியமாக்குகிறது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, ரயில் சேவைகள் 2011-ல் நிறுத்தப்படும் வரை, ரயில் சேவைகளே உயிர்நாடியாக இருந்தன. எனவே, எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், நாகமலை, கருமாத்தூர், சிக்கம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், வல்லந்தி ரோடு, பூதிபுரம் ஆகிய முன்னாள் மீட்டர்கேஜ் நிலையங்களை அப்படியே நிலைநிறுத்தி மேம்படுத்த வேண்டும்.
பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், செக்கானூரணி மற்றும் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கூடுதல் ரயில் நிலையங்களை அனுமதிக்க வேண்டும். அகல ரயில் பாதையில் 80 சதவிகித மின்மயமாக்கலுடன், ஒரு முக்கியமான மைல்கல் பதிவிற்காக ரயில்வே அமைச்சகத்தை நான் வாழ்த்துகிறேன்.
மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தையும், “இந்திய ரயில்வேயின் 100 சதவிகித மின்மயமாக்கல்” திட்டத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது கரியமில வாயுவைக் குறைப்பதி்ல், குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கிறது.
மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை மாற்றும் திட்டத்தில், சென்னை-தேனி இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை பரிந்துரைப்பதற்கு உங்களது ஆதரவை நான் கோருகிறேன். தேனி ரயில் நிலையம் உள்பட தேனி வரை அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்துள்ளன.
தேனி மற்றும் அருகில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் விவசாய சமூகத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சிறந்த போக்குவரத்து மாற்றீட்டை வழங்கும்.
தேனி-சேலம்-கோயம்புத்தூர் போன்ற தமிழகத்தின் மேற்கு மாவட்ட நகரங்களுக்கும், பெங்களூரு போன்ற மெட்ரோ நகரத்திற்கும், திண்டுக்கல்லில் இருந்து எனது தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள கம்பம் லோயர்கேம்ப் வரையிலான புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டும்.
தென்னக ரயில்வேயில், தொழில் பயிற்சி பழகுநர் காலியிடங்களில் (apprentice training vacancies) கூட, தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற இளைஞர்கள் மத்தியில் நிலவும் பொதுவான கவலையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தயவுசெய்து இந்த விஷயத்தைப் பரிசீலனை செய்து, தெற்கு ரயில்வேயில், காலி பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், அங்கு தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெரிய உற்பத்தித் தொழிற்சாலைகளில் உரிய பங்கை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நவீன ரயில் இஞ்ஜின்கள் மற்றும் பெட்டிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனது தொகுதியான தேனி தொகுதியில், ரயில் பெட்டியைப் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்யும் தொழிற்சாலையை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட பிரச்சினைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.