சென்னை:
வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
நாளை 7-ந் தேதி தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும், 8, 9-ந் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
10-ந் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இதற்கிடையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஓர் காற்றழுத்த பகுதி உருவாகக் கூடும்.
இதனால் 8, 9-ந் தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 முதல் கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.