மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் இரு கட்சி தலைவர்களும் திணறிக்கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்கவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க இது போன்று செயல்படுவதாக சிவசேனா குற்றம்சாட்டியிருக்கிறது. இந்நிலையில், புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதில் சரத்பவார் அமலாக்கப்பிரிவு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவாரிடம் கேட்டதற்கு, “அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து பேசினார்களா என்று தெரியாது. ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள சில வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டிய சில முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
இன்று காலைதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் தேஷ்முக்கை சி.பி.ஐ தங்களது காவலில் எடுத்துள்ளது. நேற்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்தின் மனைவி சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்தித்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் ஜெயந்த் பாட்டீலிடம் கேட்டதற்கு, “மகாரஷ்டிராவில் சட்டமேலவை நியமன உறுப்பினர்கள் 12 பேர் நியமனம் தொடர்பான பிரச்னை நீண்ட நாள்களாக ஆளுநரிடம் கிடப்பில் இருக்கிறது. இது குறித்து பிரதமரிடம் எங்கள் கட்சித் தலைவர் பேசியிருக்கலாம்” என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா பிரச்னை தொடர்பாகத்தான் சரத்பவார் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான சரத்பவாரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை சரத்பவார் நிராகரித்திருந்தார்.